புதுதில்லி;
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான பல்நோக்கு கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) விசாரணை அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது. அதேநேரம், ராஜீவ் காந்தி கொலையின் பின்னுள்ள சதித் திட்டம் குறித்து விசாரிக்க 1999-ஆம் ஆண்டு எம்டிஎம்ஏ (Multi Disciplinary Monitoring Agency) என்ற பல்நோக்கு கண்காணிப்பு விசாரணை முகமை அமைக்கப்பட்டது. சிபிஐ நடத்திய வழக்கின் அடிப்படையில், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் தண்டிக்கப்பட்டு, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்களில் பேரறிவாளன், வெடிகுண்டை இயக்குவதற்கான பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டார்; ஆனால், அந்த வெடிகுண்டு எந்த வகை தயாரிப்பைச் சேர்ந்தது; அதை தயாரித்தது யார்? என்று இப்போதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து, எம்டிஎம்ஏ-வின் அறிக்கையை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வுத் துறைக்கு கடந்த 17-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான முக்கிய அறிக்கையை புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது. எனினும் அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Leave A Reply

%d bloggers like this: