புதுதில்லி;
மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தமிழக அரசு அனுமதிக்காது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக இருந்தால், கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டிக் கொள்ள தடையில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது, தமிழக அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த பின்னணியிலேயே, “மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்கவில்லை” என்று தற்போது தமிழக அரசின் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே விளக்கம் அளித்துள்ளார்.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக, 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்புக்கு எதிராக, தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தற்போது இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜூலை 18-ஆம் தேதி முதல் வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, கர்நாடகத்தில் அணைகள் கட்டி தண்ணீரைத் தேக்க வேண்டிய தேவை உள்ளதாகவும், புதிய அணைகள் மூலம் நீரைச் சேமித்து வைத்தால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும் என்றும் கர்நாடக அரசு தெரிவித்தது.

தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்காகத்தான் எனும்போது கர்நாடகா புதிய அணை கட்டுவதை ஏன் அனுமதிக்கக் கூடாது? என்று நீதிபதிகள் தமிழக அரசின் வழக்கறிஞரிடம் கேட்டனர். அப்போது, தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தருவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றால் கர்நாடகா புதிய அணை கட்டுவதில் எந்தத் தடையும் இல்லை என்றார். ஆனால், புதிய அணை கர்நாடகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பொது அமைப்பின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை உறுதி செய்வதாக இருந்தால் கர்நாடகா புதிய அணையைக் கட்டிக் கொள்ளலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், “கர்நாடகம் கட்டும் புதிய அணையை 3-வது தரப்பினர் -அதாவது இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மேற்பார்வைக் குழுதான் நிர்வகிக்கும்” என்றும் தெளிவுபடுத்தினர்.ஆனால், கர்நாடகம் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசின் நிலைபாட்டுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது புதிய பிரச்சனையாகவும் மாறியது.

இந்நிலையில், காவிரி நதி நீர் வழக்கு புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகாவின் எல்லைக்குள் எந்தப் பகுதியிலும் அணை கட்டக் கூடாது; காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டவும் அனுமதிக்க மாட்டோம்; புதிய அணை கட்டுவது தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுப்பதில் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்று மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே வாதிட்டார்.

வழக்கு விசாரணையையொட்டி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகமும் உச்ச நீதிமன்றம் சென்றிருந்தார்.

Leave A Reply