கண் முன் முஸ்லிம் பெண்கள் எரித்துக் கொல்லப்பட்டதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இஸ்ரத் ஜெஹான்களை என்கவுன்டரில் கொன்றவர்கள் எல்லோருக்கும் முஸ்லிம் பெண்களின் நலனில் தங்களுக்கு உள்ளே தளும்பி வழியும் அக்கறையைக் காட்டுவதற்கு சூப்பர் சான்ஸ் கிடைத்து விட்டது. ஒரு பத்து நாளைக்கு முன் கூட நரேந்திர மோடி முஸ்லிம் பெண்களின் உரிமைகளைக் காத்தே தீருவேன் எனச் சூளுறைத்திருந்த பேச்சு நினைவிருக்கும்.

ஆகா முஸ்லிம் பெண்கள் மீதுதான் எத்தனை அக்கறை இவர்களுக்கு !

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முத்தலாக் என்பது, அதாவது கணவன் தன் மனைவியை தன் விருப்பத்திற்கு நேரடியாகவோ இல்லை தபால், தந்தி .. இப்படியாகவோ மூன்று முறை தலாக் சொல்லி விவாக ரத்து செய்வது என்பதை இப்போது இந்திய நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. அதே போல முற்றிலும் இழப்பீடு ஏதும் இல்லாமல் முஸ்லிம் மனைவியர் விவாகரத்து செய்யப்படுவதையும் நீதிமன்றங்கள் ஏற்பதில்லை.

ஏராளமான வழக்குகளை மேற்கோள் காட்டி நான் இதே பக்கங்களில் விரிவாக அதை எழுதியுள்ளேன். நூலாகவும் அது வந்துள்ளது.

இப்போதைக்கு எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் அப்படி விவாக ரத்து செய்யப்பட்டால் நீதி மன்றத்தை அணுகினால் அவர் நீதி பெறுவது உறுதி. சாட்சியங்கள் வைத்து தலாக் சொல்லப்பட்டுள்ளதா, இடையாட்கள் (interlocutors) மூலம் சமாதானம் பேசி அது சாத்தியமே இல்லாத நிலையில்தான் அந்த விவாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை எல்லாம் தலாக் சொல்லியவர் நிறுவ வேண்டும்.

அதே போல குடும்பத்திற்குள் மனைவி வன்முறைக்குள்ளாக்கப்பட்டால் தற்போதுள்ள குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்து நீதி பெறலாம்.

பிரச்சினை என்னவெனில் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலும் கல்வி அறிவு முதலியன குறைவாக உள்ளதால் (குறிப்பாக வட மாநிலங்களில்) இந்த வாய்ப்புகள் பெரும்பாலான முஸ்லிம் மக்களிடம் போய்ச்ச் சேருவதில்லை. முஸ்லிம் ஆண்களும், இயக்கங்களும் இந்த உண்மைகளையும் உரிமைகளையும் முஸ்லிம் பெண்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை.

எனினும் நூற்றுக் கணக்கான முஸ்லிம் பெண்கள் இந்தத் தீர்ப்புகளின் ஊடாக நீதி பெற்றுக் கொண்டுள்ளனர். எப்படி “அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும்” என்பது இப்போது ஒரு சட்டமாக இல்லாத போதும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் ஊடாகவே இன்று அதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனரோ அதே போல முஸ்லிம் பெண்களும் இந்தத் தீர்ப்புகளின் ஊடாக இப்படிப் பயனடைந்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு judicially evolved principle எனச் சொல்லத் தக்க அளவிற்கு இது இன்று நடைமுறையில் உள்ளது.

மோடி அரசு இந்த அம்சத்தில் இத்தனை தீவிரம் காட்டியதைப் பொறுத்த மட்டில் முஸ்லிம்களுக்கான எல்லாத் தனித்துவங்களையும், அடையாளங்களையும் அழிப்பது என்கிற இந்துத்துவ அஜென்டாவைச் செயல்படுத்துவதன் தொடக்கம் இது . அவ்வளவுதான்.

விவாகம் தொடர்பான சட்டங்களில் பல மாநிலங்களில் முஸ்லிம் அல்லாத சில பிரிவினருக்கும் கூட தனி விதிகள், உரிமைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று எவனாவது பேசுகிறானா பாருங்கள்.

எல்லோரும் தலித்கள்தான். கிறிஸ்தவ தலித்களுக்குச் சம உரிமை அளித்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இவர்களின் வாய் திறக்குமா?

முஸ்லிம் சமூகம் தன்னைச் சுய விமர்சனம், சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. ஷபனா ஆஸ்மி உள்ளிட்டவர்கள் கூட இன்று இந்தத் தீர்ப்பை ஆதரிக்கக் கூடிய நிலையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தனிமைப்பட்டுப் போய் உள்ளது. ஏற்கனவே நீதிமன்றங்கள் மூலம் இப்படியான உடனடி முத்தலாக் செல்லாததாக்கப்பட்டுள்ள சூழலில், முஸ்லிம் பெண்கள் மத்தியில் இப்படியான கோரிக்கைகள் மேலெழுந்து வரும் நிலையில் இத்தகைய பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து வெளிப்படையாக அவர்கள் விவாதிக்க முன்வர வேண்டும்.

Marx Anthonisamy

Leave A Reply

%d bloggers like this: