திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே குன்னவலத்தில் தீனதயாளன் மருத்துவக் கல்லூரி நடத்தி வந்தவர் தீனதயாளன் நாயுடு. இவர் இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி பெறாமல் 3 ஆண்டுகள் மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் மாணவர்களிடம் ரூ.16 கோடி பெற்று மோசடி செய்ததாக தீனதயாளன் நாயுடு மீது வழக்குப் பதிவு செய்தது. இதேபோல தீனதயாளன் நாயுடு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆந்திர வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.69 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.67 கோடியும் பெற்று மோசடி செய்தார்.

இந்த மோசடி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு தீனதயாளன் நாயுடுவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக  ரூ. 104 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.  அதேபோல ஏற்கனவே, அவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி சொத்து ஆவணங்களையும், கோப்புகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் ரூ.48 கோடி மதிப்புள்ள தீனதயாளனுக்கு சொந்தமான திருத்தணி மாமண்டூர் கிராமத்தில் உள்ள 17.33 ஏக்கர் விவசாய நிலம், பெரியகடம்பூரில் உள்ள 2.46 ஏக்கர் விவசாய நிலம், திருப்பெரும்புதூர் அருகே உள்ள வஞ்சுவாஞ்சேரியில் உள்ள 48 ஆயிரம் சதுரடி வீட்டுமனை, கூடுவாஞ்சேரி அருகே உள்ள வெள்ளரிதங்கல் கிராமத்தில் உள்ள 35.17 ஏக்கர் காலி இடம் ஆகியவற்றை அமலாக்கத்துறையினர் செவ்வாய்க்கிழமை முடக்கினர். இந்த நடவடிக்கையின் மூலம் தீனதயாளன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்து முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: