திருப்பூர், ஆக. 23 – திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ மற்றும் மங்கலத்தில் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றது. பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புத்தகங்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் முதலிபாளையம் சிட்கோவிலும், மங்கலத்திலும் புத்தகக் கண்காட்சியை (ஆக.20) நடத்தின. மங்கலத்தில் நடைபெற்ற கண்காட்சியை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில்பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் காமராஜ், விசைத்தறி தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் பி.முத்துசாமி உள்பட அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முதலிபாளையம் சிட்கோவில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்கள் வாங்கிச் சென்றனர். மாலையில் நடைபெற்ற கருத்தரங்கம், கலைநிகழ்ச்சியில் பனியன் தொழிலாளர்கள், ஊர்மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சரித்திரம் தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன் கருத்துரை ஆற்றினார். பள்ளி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், சிட்கோவில் டாஸ்மாக் மதுபானக் கடையை எதிர்த்து நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் விஸ்வலிங்கசாமி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் மணி என்கிற முருகசாமி, பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: