மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் ஆவடி அண்ணா சிலை அருகே தொகுதி செயலாளர் ஆர்.ராஜன் தலைமையில் செவ்வாயன்று (ஆக. 22) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதாவது:

விவசாயி, தொழிலாளி, வேலையில்லா வாலிபர்கள், இலவச கல்வி கேட்டு மாணவர்கள், சிறு குறுந்தொழில் முனைவோர், அரசு ஊழியர், வங்கி ஊழியர், ரயில்வே ஊழியர் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனப் பெண்கள் போராடி வருகிறார்கள். அறிவியல் சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும் மூடற்கூடமாக மாற்றக் கூடாது எனக் கூறி ஆகஸ்ட் 9ஆம் தேதி விஞ்ஞானிகள் 26 நகரங்களில் வீதிக்கு வந்து போராடினார்கள். ஆனால் தமிழகத்தில் தர்ம யுத்தம் வென்று விட்டது எனக் கூறுகிறார்கள். மேற்சொன்ன ஏதாவது ஒரு பிரச்சினைக்காக இவர்கள் தர்ம யுத்தம் நடத்தினார்களா அல்லது இருவரும் கோரிக்கை வைத்து இணைந்தார்களா ? இல்லை, இவர்களது சொத்தையும், ஊழல் பணத்தையும் பாதுகாக்க தர்ம யுத்தமும், இணைப்பு என்ற நாடகமும் நடத்தினர். உண்மையிலேயே மக்கள் பிரச்சினைகளுக்காக தர்மயுத்தம் நடத்துவது மார்க்சிஸ்ட் கட்சிதான் என்றார்.

நீட் விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் நீங்கள் சட்டமன்றத்தில் அவசரச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புங்கள் எனக் கூறுகிறார். இதையடுத்து தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பினால் அதை மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் ஒரு மாநிலத்திற்கு விலக்கு அளிக்க முடியாது எனக் கூறுகிறார். உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க தடை விதித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் நாங்கள் பரிசீலித்து முடிவெடுப்போம் என்றுதானே கூறினோம் என்ன முடிவெடுப்போம் என்று சொன்னோமா எனக் கேட்கிறார். நீட் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதிமுக மவுனம் காக்கிறது என்றார்.
ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு விலைவாசி குறைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் கடுமையாக விலைவாசி உயர்ந்துள்ளது. சிறு குறு நிறுவனங்கள், குடிசைத் தொழில் செய்பவர்கள், விசைத்தறி நெசவாளர்கள், பட்டாசுத் தொழில் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோடியை விமர்சித்தால் தேச விரோதி, அரசின் கொள்கைகளை விமர்சித்தால் வளர்ச்சிக்கு விரோதி, ஆர்.எஸ்.எஸ்.-சை விமர்சித்தால் இந்துக்களுக்கு விரோதி என்கிறார்கள்.ஏதேனும் ஒன்றைக் கூறி மக்களைத் திசை திருப்ப பாஜக முயல்கிறது. கடவுளையும், மதத்தையும் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முரளி, மாவட்டக் குழு உறுப்பினர் மா.பூபாலன், தொகுதிக்குழு உறுப்பினர் சடையன் ஆகியோரும் ஆவடி தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர். முன்னதாக ஆர்.சரவணன் வரவேற்றார். வேம்புலி நன்றி கூறினார்.

Leave A Reply