===டாக்டர் கா.காளிமுத்து===                                                                                                             (மறைந்த முன்னாள் சட்டமன்ற சபாநாயகர்)                                                                                                                                    எந்திரப்புரட்சி ஏற்பட்டதற்குப் பிறகு, இங்கிலாந்திலே இருந்த நிலைமை காரல்மார்க்ஸ் அவர்களுடைய சிந்தனையை ஈர்த்தது. அன்றைக்கு இங்கிலாந்தில் பெண்கள், பிரிட்டிஷ் சுரங்கத்திலே, கரி அள்ளுகின்ற வண்டிகளில் மாடுகளுக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டார்கள்.

ஆற்றோரங்களிலே சீமான்கள் உல்லாசமாகப் படகுகளிலே போகின்ற நேரத்தில், அந்தப் படகைக் கரையோரத்திலிருந்து இழுத்துச் செல்வதற்குப் பெரும்பாலும் பெண்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஒன்பது வயது, பத்து வயதுச் சிறுவர்கள் பன்னிரண்டு மணிநேரம், பதினைந்து மணி நேரம் வேலை செய்கின்ற அளவுக்கு கசக்கிப் பிழியப்பட்டார்கள்.

இந்த முதலாளித்துவ எண்ணத்தைத் தத்துவமாக ஆக்கிக் காட்டி, ஏழை என்றைக்கும் ஏழையாக இருக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு எத்தனை எத்தனையோ சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. நிலையான எண்ணங்களையும், நீர்க்குமிழி தத்துவத்தையும் சொன்னார்கள்.

மனிதனை நம்பிக்கை இழந்த நடைப்பிணமாக்குகின்ற கோழைத் தத்துவத்தை எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால், உழைப்பாளி அவனுடைய வியர்வைத் துளிகளால் எந்த அளவுக்கு செல்வத்தைக் குவிக்கிறான்; அந்தச் செல்வம் எங்கே? எப்படி? போய்ச் சேர்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக, அழுத்தந்திருத்தமாக, பொருளாதாரச் சூத்திரத்தின் மூலமாக காரல்மார்க்ஸ் எடுத்து விளக்கிக் காட்டினார்.

ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் உழைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தொழிலாளியினுடைய பத்து விரல் படாத பொருளே இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அப்படி அந்தத் தொழிலாளி உருவாக்குகின்ற ஒரு பொருளில், பத்து ரூபாய் மதிப்பை இழைக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அவனுக்கு மூன்று ரூபாய் கிடைக்கிறதென்றால், அவனுடைய உழைப்பிலே ஏழு ரூபாய் ஏமாற்றப்படுகின்றது.

ஒரு தொழிலாளிக்கு , அவனுடைய உழைப்பில் அவனுக்கு ஊதியம் கொடுக்காமல், கூலி கொடுக்காமல் எந்தப் பகுதி ஏமாற்றப்படுகின்றதோ அதற்குப் பெயர்தான் ‘ உபரி மதிப்பு’ என்று காரல்மார்க்ஸ் அவர்கள் பொருளாதாரச் சூத்திரத்தின் வாயிலாக எடுத்துக் காட்டினார். இந்த வர்க்க அடித்தளத்தினுடைய உண்மையிலே தான் எல்லா வரலாறுகளும் உருவாகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அவர் அழுத்தமாகத் தெரிவித்ததற்குப் பிறகுதான், ஒரு மிகப்பெரிய பேருண்மை உலகத்தினுடைய உழைக்கும் வர்க்கத்திற்கு, தொழிலாளி வர்க்கத்திற்குப் புரிய ஆரம்பித்தது.
மடமையை மாய்த்து, கொடுமையைக் களைந்து, சிறுமையைச் சாய்த்து, அநீதியை அகற்றி, ஆணவத்தை இடுப்பொடித்து, ஈன வாழ்வை உருக்குலைத்து, மக்களின் எண்ணத்திலே ஒரு புதிய மறுமலர்ச்சியை, மார்க்சினுடைய சித்தாந்தம் தான் உலகத்திலே உருவாக்கிக் காட்டியது என்ற உண்மையை, யாரும் திரைபோட்டு எந்தச் சூழ்நிலையிலும் நிச்சயமாக மறைக்க முடியாது.

எத்தனையோ தத்துவங்களைச் சொன்னார்கள். நீ இப்படியே இரு! இது உன் பூர்வ ஜென்ம வினை! ஏழையாகப் பிறந்தவன், அவன் ஏதோ போன ஜென்மத்திலே செய்த பாவத்தின் பரிகாரமாக அதை அனுபவிக்கிறான் என்று சொன்னார்கள் ஆனால் அந்தத் தலைவிதியைத் தார்பூசி அழித்துக் காட்டிய தத்துவ மேதை தான் காரல்மார்க்ஸ் அவர்கள்.

பிரம்மா எழுதியிருக்கிற எழுத்திற்கும் புதுத் திருத்தத்தை கொண்டு வந்து, புதிய தலைவிதியை மனித குலத்திற்கு எழுதுகிறேன் என்று எழுதிக் காட்டியவர் தான் காரல்மார்க்ஸ் அவர்கள். அவர் மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.

தன்னறிவு பெறாமல் தொழிலாளி வர்க்கம் இருந்த காலத்தில் ஏமாற்றப்பட்டது,அடிமைப்படுத்தப்பட்டது.முதலாளிகளுடைய உல்லாச வாழ்வுக்காகக் கண்ணீரை, இரத்தத்தை, வேர்வையை அவர்கள் கொட்டிக் கொடுத்தார்கள்.

தன்னறிவை ஒரு சமுதாயம் பெறாவிட்டால் தன்னுடைய நிலைமை என்ன? தான் எந்த அளவுக்கு முன்னேறியாக வேண்டும்? என்கிற உணர்வை ஒரு வர்க்கம் பெறாவிட்டால் நிச்சயமாக அது அடிமை வர்க்கமாகத்தான் அல்லல்பட வேண்டியிருக்கும். அந்த வர்க்கத்தினுடைய ஆதரவோடு கூட முதலாளித்துவம் ஆட்சி புரிய ஆரம்பிக்கும். ஆனால், தன்னறிவு பெற்றுவிட்டால், தான் யார்? தனக்குள்ள தன்மை என்ன? என்பதனை உணர்ந்து விட்டால் ஒரு சமுதாயத்தை அணுகுண்டுகளை அடைமழையாய்ப் பொழிந்தும் கூட, ஆள முடியாது என்பதற்கு உதாரணம் தான் வியட்நாம் என்பதை நான் கவனப்படுத்த விரும்புகிறேன்.

காலிலே செருப்பணியாத ஒரு வியட்நாமியன், அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்துகின்ற ஆற்றலைப் பெற்றான். அடைமழையாக அணுகுண்டுகள் பொழியப்பட்ட நேரத்திலும், எதிர்த்து நிற்கிற வல்லமையைப் பெற்றான் என்றால், சிட்டுக்குருவி வல்லூறை எதிர்த்து முறியடித்தது என்றால், அதற்குக் காரணம் மார்க்சினுடைய தத்துவம் தான் அடித்தளமே தவிர வேறு எதுவுமல்ல! அதனாலே தான் அந்த வியட்நாம் உலக மக்களுடைய கவனத்தை ஈர்த்தது.

நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். வங்காளத்தினுடைய சத்யஜித்ரே அவர்கள், ‘பிரதித்வந்தி’ என்றொரு படம் எடுத்தார். அந்தப் படத்திலே ஒரு நேர்முகப் பேட்டி நடக்கிறது. அந்தப் பேட்டியில் ஓர் இளைஞனை ஓர் அதிகாரி கேள்வி கேட்கிறார். “உன்னுடைய மனதை மிக அதிகமாகக் கவர்ந்திருக்கின்ற சர்வதேச நிகழ்ச்சி எது?” என்று கேட்கிறார்.

அந்த இளைஞன் பதில் சொல்லுகிறான். ‘வியட்நாம்’ என்று சொல்லுகிறான். அதிகாரி மறுபடியும் கேட்கிறார். “ வியட்நாம் என்று சொல்லுகிறாயே, அமெரிக்காக்காரன் சந்திரனிலே கால் வைத்திருக்கிறானே! அது உன் மனதைக் கவரவில்லையா?” என்று கேட்கிறார். அந்த இளைஞன் திரும்ப பதில் சொல்லுகிறான்.

“அமெரிக்காக்காரன் சந்திரனிலே கால் வைத்தது உண்மை தான்; ஆனால் வியட்நாமிலே கால் வைக்க முடியவில்லையே!” என்று அவன் சொல்லுகிறான். ஆக, தன்னறிவு பெற்ற ஒரு சமுதாயம் எப்படி ஒரு வல்லரசையே வீழ்த்திக் காட்ட முடியும், என்பதற்கு தத்துவ மேதை மார்க்ஸ் தந்திருக்கின்ற அந்தத் தத்துவம் நிலையான நிரூபணமாக இன்றைக்கும் நின்று கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ அமைப்பிலே செல்வம் வளரலாம்; கோடி கோடியாக வசதிகள் குவியலாம். ஆனால், சமுதாயத்தில் இருக்கின்ற அத்தனைப் பேருக்கும் பரவலாக வாய்ப்பு கிடைக்குமா? என்றால், கிடைக்காது. அமெரிக்காவையும், மக்கள் சீனாவையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். மிகப்பெரிய செல்வம் கொழிக்கிற அமெரிக்கா தான்.

நியூயார்க் நகரத்திலே, ஒரு நாள் இரவிலே, வீணாக்கப்படுகின்ற உணவுப் பொருளை வைத்து, சென்னை போன்ற நகரத்திற்கு 40 நாட்கள் உணவளிக்கலாம் என்று டாக்டர் சந்திரசேகர் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட அமெரிக்கா தான்! அந்த அமெரிக்காவிலே வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது.

பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, பட்டினி இருக்கிறது. ஆனால், உலகத்திலேயே மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்ற மக்கள் சீனாவில், வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை, பசிஇல்லை, பஞ்சம் இல்லை, பட்டினி இல்லை என்றால், அவர்கள் இந்த சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது.

Leave A Reply