“பிரதம மந்திரியின் ஆவாஸ்  யோஜனா” என்ற மத்திய அரசின் திட்டமான “பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம்” மூலம் , ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்து முப்பது ஆயிரம் வரை மானியத்தோடு, குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்பட்டுவருகிறது. நகர்ப்புற  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் , மத்திய அரசு இத் திட்டத்தை அறிவித்துள்ளது.

“சென்னை மாநகரத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாஜகவினர் ஆங்காங்கே விளம்பர பேனர் வைத்துக்கொண்டு மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்திற்கு  முன் பதிவு செய்யப் படுகிறது. வீடு பெற விரும்புவோர் ஆதார், அட்டை, பாங்க்க பாஸ் புத்தகம் கொண்டு வரவேண்டும் என்றனர். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதிவு கட்டணமாக  ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.250 வீதம் வசூல் வேட்டை நடத்தினர். ” அவர்களை நம்பி பணம் கட்டியவர்களின் ஒருவருக்கும் இதுவரைக்கும் வீடு கிடைக்கவில்லை.

பணம் வசூல் செய்த பாஜக நிர்வாகிகளை அணுகியபோது, வங்கிகள் மூலம் கடன் கொடுக்கப்படும் என்றார்கள். அந்த வாக்கு மூலத்தை நம்பி வங்கி மேலாளர்களை சந்தித்தனர். சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். அந்த நிலமும் விண்ணப்பம் கொடுத்தவரின் பெயரில் தான் இருக்க வேண்டும். மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 15 ஆயிரம் பெறவேண்டும். இப்படியாக நிபந்தனைகளை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். இதனால், பாஜகவின் மீது சென்னை நகர மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதையறிந்துகொண்ட பாஜகவினர், இனி நம்ம பருப்பு இங்கு வேகாது என்பதால் மாவட்டங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகரம், கிழக்கு ஒப்பனைக்காரத் தெருவில், பாஜகவினர் வைத்துள்ள பேனரில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும், இங்கு பதிவு செய்யலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளனர். அரசு அறிவித்துள்ள இணைய தளத்தில் www.pmaymis.gov.in கொடுக்கப்படுள்ள விவரத்தில் ரூ.25 (வரி தனி) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இங்கு அதிக பட்சமாக ரூ. 250 வசூல் செய்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்கும் போது, வரும் 2022 வரை அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன் பதிவு செய்ய அரக்கோணத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில், 14 ந் தேதி முதல் 18 ந்தேதி வரை என போடப்பட்டுள்ளது. ஆனால், 22ந் தேதிக்கு பிறகும் முன் பதிவு நடந்து வருவதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்புகிறார் சிபிஎம் அரக்கோணம் தாலுகாக்குழு உறுப்பினர் டி.துரைராஜ்.  மத்திய அரசு மூலம் வழங்கப்பட்டு வரும்  இத் திட்டத்தை, தமிழக பாஜகவினர் அரசியல் லாபம் பெறவும், கட்சியை விளம்பரப் படுத்தும்  நோக்கிலும்  செயல்படுத்துவதை வன்மையாக கண்டிப்பதாக  கட்டுமானச்சங்க பொறுப்பாளர் பி.கே. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

பிரதமர் மோடி, அகில இந்திய செயலாளர் அமீத்ஷா, தமிழ் மாநிலச் செயலாளர் தமிழிசை ஆகியோர்களின் படங்களைப் போட்டு, அரசு வழங்கும் திட்டத்தை மத்திய ஆளுங்கட்சி சுய லாபம் அடையவும், அதிகார துஷ்பிரயோகம்  செய்வதையும் அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட  காவல்துறை நிர்வாகம்  கண்ணை மூடிக்கொண்டு இருப்பதின் மர்மம் என்ன? இது பற்றி மத்திய-மாநில அரசுகள் உரிய  விளக்கத்தை அளிக்க வேண்டும்.  ஊழலை ஒழிக்க இந்தியாவில் அவதரித்ததாக கூறிக்கொள்ளும் பாஜக, அரக்கோணத்தில் நடைபெற்று வரும் இச்செயல் ஊழல் முறைகேடு இல்லையா? பாஜக அகராதியில் இந்த செயலுக்கு என்ன பெயரிட்டு உள்ளது, என்று தெரியவில்லை. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதியான முக்கிய கடை வீதியில், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில், சுமார் இருநூறுக்கும் அதிகமான  பொதுமக்கள்    பதிவிற்காக  கூடுகின்றனர். மாடியில் நடக்கும் இந்த பதிவிற்கு  ஒருவர் மாத்திரமே செல்லும் வழியில், கூட்ட நெரிசலில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதிக கூட்டம் கூடினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்” என சிபிஎம் அரக்கோணம் தாலுகா செயலாளர் வெங்கடேசன் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்திட்டத்தைப் பற்றி அரசு வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
“மத்திய அரசு நகர்ப்புற வளர்ச்சிக்கு என” பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்” என்ற பெயரில், வீட்டு மனை உள்ள, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு  என இத்திட்டத்தின் மூலம் பயன் அடையும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதில் பயன்அடைய மத்திய அரசு அறிவித்துள்ள இணைய தளத்தில் கூறியுள்ளவாறு, பயனாளிகள், ரூ.25 கட்டணம் செலுத்தி இதில் உறுப்பினராகலாம். எந்த தனி மனிதரிடமோ, கூட்டாக சேர்ந்து முன் பதிவு செய்யவோ கூறவில்லை,” என்றார்.

    – கே ஹென்றி

Leave A Reply

%d bloggers like this: