‘நீட்’ தேர்வால் மனஉளைச்சலில் உள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க nண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை வழங்கினார்.

உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் கிருத்திகா. இவர் 12ஆம் வகுப்பில் 1184 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், அவர்  199.25 கட்-ஆப் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 154 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.

எனவே, தன்னை மருத்துவக் கலந்தாய்வில்  அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு புதனன்று (ஆக. 23)  நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்,  உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பின்படி ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் புதனன்று (ஆக. 23) காலை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு எப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று யாருக்கும் தெரியாது என்றார்.
அப்போது நீதிபதி, தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் எந்தெந்த பாடத்திட்டத்தில் எத்தனை மாணவர்களுக்கு இடம்கிடைக்க வாய்ப்புள்ளது என்று பிற்பகலில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு மீண்டும் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தற்போது மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனவே மாணவர்கள் மன உளைச்சலில் தவறான முடிவை எடுக்கக் கூடாது என்ற அக்கறை நீதிமன்றத்துக்கு உள்ளது. அவர்களுக்கு கவுன்சலிங் வழங்க வேண்டும் என்றார்.  மேலும், ‘நீட்’ தேர்வை சி.பி.எஸ்.இ.,  மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும் எழுதுவார்கள். எனவே, நீட் தேர்வுக்கான கேள்வித்தாளை சி.பி.எஸ்.இ இல்லாமல் நடுநிலையான குழுவை அமைத்து அதன் மூலம் கேள்வித்தாள்களை தயாரித்திருக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.