கூடலூர், ஆக. 23- டேன் டீயை அழிக்கும் ஆளும் அதிமுக அரசை கண்டித்து கூடலூரில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்திற்கு (டேன் டீ) சொந்தமான சில்வர் ஓக் மரங்களையும், விலை உயர்ந்த ஈட்டிமரங்களையும் ஒப்பந்தம் என்கிறபெயரில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆளும் அதிமுகவினர் வெட்டி கடத்திட முயலுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். இந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்புகளை செப்பனிட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்தி திடலில் அனைத்து கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாராக் தலைமை வகித்தார். கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.பெள்ளி, காங்கிரஸ் கட்சியின் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்டத் தலைவர் கே.பி.முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கா.சகாதேவன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல்சமது, சமக மாவட்டச் செயலாளர் சம்சுதீன் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, குஞ்சு முகமது, பாஸ்கரன்,டி. பாலகிருஷ்ணன், முகமதுகனி, குணசேகரன், முத்துக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், திமுகவின் அ.இராஜேந்திரன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: