கோபிசெட்டிபாளையம்: கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகளுக்கு எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் பகுதியில் உணவு பொருள்கள் விற்பனை கடைகள், தேனீரகங்கள் என 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாகவும், விலை அதிகமாகவும், காலாவதியான உணவுப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதனையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அறிவுரையின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் தேனீரகங்கள் மற்றும் உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காலாவதியான பிஸ்கெட், குளிர்பானங்கள், காரவகைகள், இனிப்பு பலகாரங்கள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தேனீரகங்களில் பயன்படுத்தும் டீ தூள்களில் கலப்படம் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறாக இருந்த கடைகளுக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது,

மேலும், பழமுதிர் நிலையங்களில் பழச்சாறுக்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய பழங்களையும் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்றும் பான்பராக், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என்றும் 100க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தசோதனையில் காலாவதியான உணவு பொருட்கள், அழுகிய பழங்கள் என ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வெளியில் கொண்டு சென்று புதைத்து அழித்தனர். மேலும், தற்போது எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ள கடைகளில் மீண்டும் இதுபோல் காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: