புதுதில்லி;
அந்நிய செலாவணி மோசடி வழக்கில், தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜர் ஆனார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவரான ப. சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது, 2007-08 காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனமானது, வெளிநாட்டிலிருந்து பெற்ற ரூ. 305 கோடி மதிப்பிலான முதலீடுகளை, வெறும் 4 கோடி ரூபாயாக குறைத்துக் காட்டி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேட்டுக்கு, ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும், ‘அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் கன்சல்டிங் நிறுவனம்’ அளித்த ஆலோசனைதான் காரணம் என்றும், இதற்கு கைமாறாக, கார்த்தியின் நிறுவனத்திற்கு ரூ. 90 லட்சம் கைமாறியதாகவும் கூறப்பட்டது.
கார்த்தி சிதம்பரத்திடம், இதுபற்றி விசாரிக்க 2 முறை சிபிஐ சம்மன் அனுப்பியது.

ஆனால் அவர் ஆஜராகவில்லை என்பதால், ஆகஸ்ட் 4-ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்தை, தேடப்படும் குற்றவாளியாக மத்திய உள்துறை அறிவித்தது. விமான நிலையங்களுக்கு, ‘லுக்-அவுட்’ சுற்றறிக்கையை அனுப்பி வைத்தது.

இதற்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றம் சென்றார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்துறை அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், கடந்த 14-ஆம் தேதி இந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கார்த்தி சிதம்பரம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஆகஸ்ட் 18-ஆம் தேதி கறார் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது.

சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்போது, கார்த்தி சிதம்பரம் தனது வழக்கறிஞரையும் உடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்தது.

அதனடிப்படையில், கார்த்தி சிதம்பரம் தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏராளமான கேள்விகளை எழுப்பி பதில் பெற்றனர். கார்த்தியுடன் சென்ற அவரது வழக்கறிஞர் தனி அறையில் அமர்த்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்துக்கு தேவைப்படும் போது மட்டும் அவர் நேரில் சென்று உதவி செய்தார்.

Leave A Reply

%d bloggers like this: