காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் சென்னை அணுமின் நிலையம்,பாவினி அணுமின் நிலையம், இந்திரகாந்தி மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்த அணுமின் நிலையங்களில், கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள கிராம மக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பான அவசரகால ஒத்திகை புதனன்று (ஆக 23) கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இதில், கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கருதப்படும் கிராம மக்களை பாதுகாப்பாக மீட்டு, அணுமின் நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள நல்லாத்தூர் கிராமப்பகுதியில் அமைக்கப்பட்ட கதிரியக்க சோதனை மையங்களில்,  மீட்கப்பட்ட மக்களை தூய்மையான தண்ணீரில் கழுவி,அவர்களின் உடலில் அணு துகள்கள் படிந்துள்ளனவா என சோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு அயோடின் மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டார்.  செங்கல்பட்டு கோட்டாட்சியர் ஜெயசீலன் தலைமையில், சுகாதாரத்துறை, வருவாய்துறை மற்றும் தீயணைப்புதுறையினர் அவசரகாலத்தில் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில், சென்னை அணுமின்நிலைய இயக்குநர் சத்யநாராயணா தலைமையில் இயங்கும் கல்பாக்கம் அவசரநிலை குழுவினர் தொழில் நுணுக்கம் சார்ந்த உதவிகளை மேற்கொண்டனர். மேலும், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புபடையை சேர்ந்த வீரர்கள், கிராம மக்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ஒத்திகையை நடத்திக்காட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: