எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து, வாக்களித்த சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் ஆளுநரை நேரில் சந்தித்து எடப்பாடி கே.பழனிசாமி தலைமையின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும், அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.

மைனாரிட்டி நிலையில் ஆட்சியில் தொடருவது ஜனநாயக முறைக்கு ஏற்றதல்ல. ஆகையால் சட்டரீதியாவும், ஜனநாயக நெறிமுறைப்படியும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அரசியல் தேவை எழுந்துள்ளது.  உடனடியாக சட்டமன்றப் பேரவையைக் கூட்டி அதில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடப்பாடி கே.பழனிசாமியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.