சென்னை;
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களே போர்க்கொடி தூக்கியுள்ள பின்னணியில், தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக எழுந்துள்ள அரசியல் சூழல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், வியாழக்கிழமையன்று தில்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுக-வில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி – தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான கோஷ்டிகள், திங்களன்று ஒன்றாக இணைந்தன. கட்சியிலும், ஆட்சியிலும் தங்களுக்கு உரிய இடங்களை பகிர்ந்து கொண்ட அவர்கள், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் வி.கே. சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

இதற்கு அதிமுக-வுக்கு உள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. சசிகலா – டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்படும் 19 எம்எல்ஏ-க்கள், செவ்வாய்க்கிழமையன்று ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.

இதன்மூலம், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. 234 உறுப்பினர்கள் கொண்ட பேரவையில் மெஜாரிட்டிக்கு 117 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், தற்போது 113 உறுப்பினர்களே எடப்பாடி அரசுக்கு உள்ளனர்.

எனவே, தமிழக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் புதனன்று ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
குதிரை பேரம் நடப்பதற்கு முன்னால் ஆளுநர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஆளுநரின் உத்தரவுக்காகவே காத்திருப்பதாகவும், அதன்பிறகே தமிழகம் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 19 பேரும், தற்போது புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏ-களின் ஆதரவு வாபஸ் கடிதம், எதிர்க்கட்சித் தலைவரின் கடிதம் மற்றும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கருதும்பட்சத்தில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டியது ஒரு ஆளுநரின் பொறுப்பாகும். ஆனால், தமிழக பொறுப்பு ஆளுநரோ, மாறியுள்ள நிலைமையை நன்கு அறிந்து பின்பும், செவ்வாயன்று சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் அவர் வியாழக்கிழமையன்று மும்பையிலிருந்து தில்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave A Reply