ஐதராபாத் :
நாடு முழுவதும் மின்சாரம் சீராக வழங்கிட மாநில மின்வாரியங்களை ஒன்றாக இணைக்கவேண்டும் என்று இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய மின்ஊழியர் கூட்டமைப்பின் 8ஆவது அகில இந்திய மாநாடு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் ஆகஸ்ட் 18, 19, மற்றும் 20 தேதிகளில் நடைபெற்றது.

நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கம் என்ற பெயரால் மின்சார சட்டம் 2003ஐ முன்னிறுத்தி மாநில மின்வாரியங்களை கூறுகளாகப் பிரிப்பது, பின்னர் இந்திய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மின்துறையை காணிக்கையாக்குவது என்ற அரசின் கொள்கையை பரிசீலித்த இந்த மாநாடு மின்வாரியங்களை சிதைத்து தனியார் மயமாக்குவது என்பது மின்பற்றாக்குறை உருவாக்கும்.

மின்கட்டணத்தை அபரிமிதமாக்கும் என்று எச்சரித்த போதிலும் அந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளி கடந்த 15 ஆண்டுகளாக மின்வாரியங்களை சிதைப்பதை மூர்க்கத்தனமாக மத்திய, மாநில அரசுகள் அமலாக்கின.

மின்வாரிய சிதைப்பு என்பது மின்பற்றாக் குறையைப் போக்கவோ, மின் கட்டணத்தை குறைக்கவோ, மின்இழப்பை தடுக்கவோ, மின்வாரிய நிர்வாக திறமையை வளர்க்கவோ இயலாத போதும், மின்பற்றாக்குறையும், மின்கட்டண உயர்வும், சாதாரண மக்களை வாட்டி வதைக்கின்ற நிலையில் “கடந்த 15 ஆண்டுகளாக மறுசீரமைப்பு என்றபெயரால் உடைத்த மாநில மின்வாரியங்களை ஒன்றாக இணைத்திடுக” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த அகில இந்திய மாநாடு நடைபெற்றது.

நாடு முழுவதும் தேவைக்கு கூடுதலான மின்சாரத்தை உற்பத்தி செய்த போதிலும், மின்சாரத்தை இந்திய நாடு முழுவதும் ஒரே சீராக கொண்டு செல்ல மின் தொடரமைப்பு கட்டமைப்பும், மின்விநியோக ஏற்பாடும் இல்லாத காரணத்தால் உபரி மின்சாரம் இருந்த போதிலும் ஆண்டு முழுவதும் இந்தியாவின் ஏதாவது ஒருபகுதியில் மின்பற்றாக்குறை ஏற்படுவதும், அதற்கெதிரான மக்கள் கிளர்ச்சிகளும் அன்றாட நிகழ்ச்சிகளாக உள்ளதைச் சுட்டிக்காட்டி உற்பத்தியாகும் மின்சாரத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் தொடரமைப்பை பலப்படுத்தி, மின்விநியோகத்தைச் சீராக்கி அனைத்து பகுதி மக்களுக்கும் தடையின்றி மின்சாரம் சீராக வழங்கிடுக என்ற முழக்கத்தை இந்திய மின்ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு முன்வைத்தது.

இந்திய மின்துறையில் மறுசீரமைப்பு என்ற பெயரால் நிரந்தர தொழிலாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அங்கு ஒப்பந்த தினக்கூலி தொழிலாளர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் என்ற உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்திடு, மேலும் 2016ஆம் ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பான சமவேலைக்கு சமஊதியம் என்ற தீர்ப்பை அமல்படுத்தி இந்திய நாடு முழுவதும் பணியாற்றும் ஒப்பந்த, தினக்கூலி, அவுட்சோர்சிங் தொழிலாளிக்கு அத்துறையில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளிகளுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்கிடுக என்ற முழக்கத்தை இந்திய மின்ஊழியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாடாடு முன்வைத்தது.

இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களின் ஒற்றுமைக்கு உலைவைக்கும் மதவாத, தீவிரவாத சக்திகளை முறியடித்திடுவோம். அது இந்திய உழைப்பாளி மக்களின் முன்னுள்ள பிரதான கடமையாகும்.

மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி. அரசு முன்வைத்த முழக்கமான வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கின்ற வகையில் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று அளித்த வாக்குறுதி இன்றைக்கு சில லட்சம் வேலை வாய்ப்புக்களே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 2013ஆம் ஆண்டில் 4.18 லட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவானதாகவும், அது 2014ஆம் ஆண்டு 1.35 லட்சமாக குறைந்திருப்பது என்பது வேலை வாய்ப்புக்களை வாக்குறுதிப்படி உருவாக்காததோடு இருக்கின்ற வேலைகளை பறிக்கின்ற நிகழ்ச்சிகள் தான் நடைபெற்று வருகிறது என்பதைசுட்டிக்காட்டிய மாநாடு மத்திய அரசு அறிவித்த வாக்குறுதி அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அரசை வலியுறுத்தும் தீர்மானமும் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது, தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்தாததோடு, அமல்படுத்தாத தனியார் நிறுவனங்களையும் தட்டிக் கேட்பதற்கு பதிலாக, அதற்கு பக்கபலமாக நின்று தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கின்ற அதே நேரத்தில் விவசாயிகள் பெற்ற கடன்களை கொடூரமான முறையில் வசூலிப்பது மானியங்களை வெட்டுவது, விவசாய விளை பொருளுக்கு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயிக்காத காரணத்தினால் விவசாயம் சீரழிந்து, விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்ற இக் காலக்கட்டத்தில் அரசினுடைய கொள்கைகளை பின்னுக்கு தள்ள வேண்டுமானால் விவசாயத் தொழிலாளி ஒற்றுமையும், வீரஞ்செறிந்த போராட்டங்களின் அவசியத்தை மின்ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு வலியுறுத்தியது.

மார்க்ஸ் 200ஆம் ஆண்டு
கார்ல் மார்க்ஸின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இந்திய நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவது என்று மாநாடு முடிவு செய்தது. இம்மாநாட்டில் புதியபென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்து, சமவேலைக்கு சமஊதியம் வழங்கிடு, மேலும் விலைவாசியைக் குறைத்திடுக, வேலை வாய்ப்பை உருவாக்கிடுக, ஆலை மூடல் – ஆட்குறைப்பு செய்யாதே, தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே, குறைந்தபட்ச ஊதியம் ரூ, 18,000/ ஆக நிர்ணயித்திடு, குறைந்தபட்ச பென்சன் ரூ. 3000/ உறுதிப்படுத்திடு, பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே என்ற முழக்கத்தோடு நவம்பர் 9,10,11 தேதிகளில் டெல்லியில் கூடும் உழைப்பாளி மக்களோடு ஒன்றிணையும் வகையில் இந்திய நாடு முழுவதுமுள்ள மின்வாரிய ஊழியர்கள், சீருடை அணிந்து பல்லாயிரக் கணக்கில் பங்கேற்பது என்று மாநாடு முடிவு செய்தது.

இம்மாநாட்டில் கே.ஓ.ஹபீப் அகில இந்திய தலைவராகவும், ஸ்விடீஸ் தேவ்ராய் செயல் தலைவராகவும், பிரசாந்த நத்சௌத்ரி பொதுச் செயலாளராகவும், எஸ்.எஸ். சுப்பிரமணியன் பொருளாளராகவும் மற்றும் 25 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்,அதில் தமிழகத்திலிருந்து எஸ். இராஜேந்திரன் எம். தனலட்சுமி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட 54 பேர்களில் தமிழகத்திலிருந்து ஆர். குருவேல், வி. இளங்கோ, கே. அருட்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave A Reply