ரயில் நிலையம், ரயில்வே உணவகம், தண்டவாளப் பராமரிப்பு  என எல்லாவற்றிலும் தனியார் மயத்தை நோக்கி செல்லும் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் பொதுமக்களையும் இணைத்துப் போராடவேண்டும் என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் கேட்டுக்கொண்டார்.

ரயில்வே துறையில் தனியார்மயமாக்கலை கண்டித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யு) சார்பில் தமிழகம் தழுவிய கருத்தரங்கம் சென்னையில் புதனன்று (23) நடைபெற்றது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது:

1991ஆம் ஆண்டில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க, ஒப்பந்த முறையை ஒழித்துக்கட்ட, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக கடந்த 26 வருடங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து போராடியதன் விளைவாக சில நேரங்களில் தனியார்மயம் தடுக்கப்பட்டது. தபால் துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தர ஊழியர்களாக்கக் கோரி போராட்டம். செவ்வாயன்று 10 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்ற போராட்டம். அதேபோல் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம். பிஎஸ்.என்.எல். ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து தொடர் போராட்டம். பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தனியார்மயத்தைக் கண்டித்து ஜூலை 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ச்சியாக அனைத்து துறையினரும் தேசப்பற்றோடு பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க போராடி வருகிறார்கள்.

அமெரிக்கா தன்நாட்டு நலன்தான் முக்கியம் எனக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வெளிநாட்டுக் கொள்கைகளை இங்கே அமல்படுத்துகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது 447 ரயில்வே ஸ்டேஷன்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. நாம் இந்த கொள்கைகளை எதிர்த்து போராடி வருகிறோம். ஆட்சி மாறினாலும் கொள்கைகள் மாறவில்லை. எனவே அனைத்து தொழிற்சங்கங்களையும், பொதுமக்களையும் இணைத்துப் போராடுவோம் என்றார்.

அரிபரந்தாமன்
கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் நாடு சுதந்திரமடைந்தவுடன் அணுசக்தி , பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகிய 3 துறைகளை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதியது. அதனால் தான் ரயில்வேக்கு தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதையும் இப்போது ஒழித்து விட்

டார்கள். 1990களில் இருந்து தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (எல்.பி.ஜி) ஆகியவை முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆட்சியாளர்கள் கல்வியையும் சுகாதாரத்துறையையும் வேகமாக தனியார்மயமாக்கி வருகிறார்கள்.

2009ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு ரயில்களை இயக்குதல்  கட்டுமானம் உள்ளிட்ட அனைத்தும் தனியார் மயம் என அறிவித்தது. பாஜக அரசோ இயக்கத்தையும் சேர்த்து தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மோடி பல நாடுகளுக்குச் சென்று இந்தியாவில் ரயில்வேயில் முதலீடு செய்ய வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார். ஆனால் யாரும் வரவில்லை. ஏனென்றால் லாபம் தரும் துறையில்தானே தனியார் முதலீடு செய்வார்கள். 20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் ரயில்வேத் துறையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். கேங்மேன் பணியில் பாதிப்பேர் நிரந்தர ஊழியர்கள், பாதிப்பேர் ஒப்பந்த ஊழியர்கள். நிரந்தர தொழிலாளி பணியில் இருந்து ஓய்வு பெற்றால் அதற்குப் பதில் புதிய ஊழியரை நியமனம் செய்யாமல் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். இது நூதன முறையில் தொழிற்சங்கத்தை ஒழித்துக்கட்டும் செயல் என்றார். ஒப்பந்த தொழிலாளர்களையும் திரட்டி 20 லட்சம் ஊழியர்களும் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

ஜி.சுகுமாறன்
கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிப் பேசிய  சிஐடியு மாநில பொதுச் செயலாளரும் டி.ஆர்.இ.யு தலைவருமான ஜி.சுகுமாறன், ரயில்வேயில் தனியார்மயத்தைக் கண்டித்து மனித சங்கிலி, டிவிஷன் வாரியாக போராட்டம் என தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்தியதோடு இப்போது இந்த கருத்தரங்கை நடத்துகிறோம்.1990களில் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டதில் இருந்து காங்கிரஸ், பாஜக அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மோடி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் அதன் வேகம் அதிகரித்துள்ளது.

கடந்த மத்திய ஆட்சியில் தொழிலாளர்களின் போராட்டத்தினால் நெய்வேலி நிலக்கரி, சேலம் உருக்காலை ஆகியவற்றை தனியார்மயமாக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார்கள். ஆனால் மோடி அரசு வேகமாக தனியார்மயத்தை அமல்படுத்துகிறது. கூட்டணி ஆட்சி இருந்த போது தனியார்மயம் தடுக்கப்பட்டது. கூட்டணி இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன்  மத்தியில் அரசு அமைவது தொழிலாளர்களுக்கு விரோதமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ரயில்வே தனியார்மயத்திற்கெதிராக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் போராடத் தயாராக இல்லை. நாம் அனைவரையும் ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.

மூர்த்தி
ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் சிலர் ஊழல் பணத்தையும், சொத்தையும் பாதுகாக்க தர்மயுத்தம் நடத்துகிறார்கள். இங்கு மக்களின் சொத்தை பாதுகாக்க கருத்தரங்கம் நடைபெறுகிறது. எப்படி முதலில் கேஸ் மானியம் வங்கியில் செலுத்தப்படும் என்று அறிவித்து, இறுதியில் மானியத்தை ரத்து செய்து விட்டார்களோ அதுபோல் ரயில்வே தனியார்மயமாகாது என கூறிக் கொண்டே துறைவாரியாக தனியார்மயத்தை புகுத்துகிறார்கள் என்றார்.

கருத்தரங்கில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன், டிஆர்.இ.யூ பொதுச் செயலாளர் பி.மாத்யூசிரியாக், அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் கழக இணைச் செயலாளர் கே.பார்த்தசாரதி, இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்ரவைசர் அசோசியேஷன் பொதுச் செயலாளர் கே.வி.ரமேஷ், அகில இந்திய ரயில்வே அக்கவுண்ட்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரெஜி ஜார்ஜ், யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பி.ராஜாராமன் உள்ளிட்டோரும் பேசினர். நிகழ்ச்சியில் செயல்தலைவர்கள் ஏ.ஜானகிராமன், ஆர்.இளங்கோ, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, மாவட்ட துணைத்தலைவர் பி.என்.உண்ணி உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: