புறநகர்ப் பகுதிகளில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் தெற்கு வட்டார அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள திருவொற்றியூர் (மண்டல 1), மணலி (மண்டலம் 2), மாதவரம் (மண்டலம் 3), அம்பத்தூர் (மண்டலம் 7), வளசரவாக்கம் (மண்டலம் 11), ஆலந்தூர் (மண்டலம் 12), பெருங்குடி (மண்டலம் 14), சோழிங்கநல்லூர் (மண்டலம் 15) ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் விடப்படவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தரமான உபகரணங்கள் வழங்குவதோடு, அனைத்து கோட்டங்களிலும் ஓய்வறை அமைத்துத் தர வேண்டும், டிரைசைக்கிள், காம்பாக்டர் பின் பகுதி (டப்பா) போன்றவற்றை முறையாக பராமரிப்பதோடு, தரமான உதிரிபாகங்களைக் கொண்டு வாகனங்களை பராமரிக்க வேண்டும்,

என்எம்ஆர், தொகுப்பூதியம், சொர்ணஜெயந்தி திட்ட தற்காலிக தொழிலாளர்கள் போன்றோருக்கு 5ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் செவ்வாயன்று (ஆக.22) அடையாறில் உள்ள தெற்கு வட்டார அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். தெற்கு வட்டார துணை ஆணையர் கோபால சுந்தரராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாததால் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் தலைவர் எல்.சுந்தரராஜன், பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதனால் முற்றுகை நீடித்தது. இதன்பின்னர் பிற்பகலில் துணைஆணையர் அலுவலகத்திற்கு வந்து சங்கத் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.

இதில், குப்பை அள்ளும் பணி உடனடியாக தனியாரிடம் விட மாட்டோம். சங்கத்தின் ஆலோசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், உபகரணங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், சிலநாட்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். மண்டலம் 15ல் தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி 346 ரூபாயை வழங்க உத்தரவிடுவதாகவும், ஓய்வறைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்று சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் தேவராஜன், ராஜன், முனுசாமி, துணைத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, 12வது மண்டல செயலாளர் கர்ணவேல் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: