நாமக்கல், ஆக. 22- பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 7-வது மாநாடு எலச்சிப்பாளையத்தில் மாவட்ட தலைவர் கலாவதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பி.ஜெயமணி மாநாட்டினை துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் கே.ஜோதிலட்சுமி, மாநில உதவி செயலாளர் ஜி.சாவித்ரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஓய்வு பெற்ற வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முரளிதரன் வாழ்த்திப் பேசினர்.

இம்மாநாட்டில், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மதுபானக் கடைகளை அரசு முற்றிலும் அகற்ற வேண்டும். ரேசன் பொருட்களை தடையில்லாமல் வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்த நிறுத்த வேண்டும், எலச்சிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக திலகவதி, செயலாளராக ஆர்.அலமேலு, பொருளாளராக செல்வராணி, துணைத்தலைவராக கோமதி, துணைச் செயலாளராக சாரதா ஆகியோர் புதிய நிர்வாகிகளாகவும், புதிய மாவட்ட குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave A Reply