வாடிக்கையாளர்களின் சேவை வரியை உயர்த்தக் கூடாது, வங்கிகள் தனியார்மய முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, வங்கி அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் செவ்வாயன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்  அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் பேசியதாவது : கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தினோம். அரசு இதுவரை கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போகிறோம் என நோட்டீஸ் கொடுத்தோம். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் ஒரு கோரிக்கையைக் கூட அமைச்சகம் ஏற்கவில்லை. விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, கல்விக்கு, சுயதொழில் புரிவோருக்கு அரசு வங்கிகள்தான் கடன் கொடுக்கின்றன. எந்த தனியார் வங்கியும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் இவர்கள் கொடுக்கும் நெருக்கடியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசையும், மக்களையும் தனியார் வங்கிகள் ஏமாற்றுகின்றன. இதுவரை மோசமான நிர்வாகம் மற்றும் மோசடியால் 30 தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்களின் சேமிப்பு பணம் 110 லட்சம் கோடி ரூபாய் அரசு வங்கிகளில் உள்ளது. இது பாதுகாக்கப்பட வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது என்ற தேசப்பற்றோடு போராடுகிறோம். பொதுத்துறை வங்கிகளை அதிகரிக்க வேண்டும். அரசு மூலதனம் இல்லாததால் சில வங்கிகள் இழப்பை சந்திக்கின்றன. அந்த வங்கிகளுக்கு அரசு மூலதனம் வழங்கி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளை இணைக்கக் கூடாது.

பெருகிவரும் வாராக் கடனை வசூலிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. சாதாரண மக்களின் சேமிப்பு மூலமாக பெரும் வைப்புத் தொகையை (டெபாசிட்) பெரும் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் கடனாக அளிக்கின்றனர். ஆனால் அந்த பெரும் நிறுவனங்களும், முதலாளிகளும் கடன்களை திருப்பி செலுத்துவதில்லை. வாரக் கடன் பட்டியலை வெளியிட வேண்டும். வேலை நிறுத்தம் என்று அறிவித்தவுடம் 12 பேர் கொண்ட பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வரவேண்டிய கடன் 2 லட்சத்து 53 ஆயிரத்து 729 கோடி ரூபாய். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அரசாங்கம் வாராக்கடன்களை சலுகையாக அறிவித்து ரத்து செய்து வருகின்றன. மேலும் வாராக்கடன் கணக்குகளை அடிமாட்டு விலைக்கு தனியார் நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர். இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள்  பங்கேற்றனர். தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நாடு முழுவதும் 40 லட்சம் காசோலை சேவையும், தமிழகத்தில் 12 லட்சம் காசோலை சேவையும் பாதிக்கப்பட்டது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியும், அக்டோபரில் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மக்களுக்கு எதிரான வங்கி சீர்த்திருத்தத்தையும், ஊழியர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தையும் அமல்படுத்தக்கூடாது, நிரந்தர வேலைகளை வெளியில் கொடுப்பதை நிறுத்த வேண்டும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும், வங்கியில் கடன் வாங்கி செலுத்தாத பெரும் நிறுவனங்கள் மீது குற்றப் பின்னணியில் நடவடிக்கை எடுக்க வேண்டும், 2 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் யுஎப்பியு ஒருங்கிணைப்பாளர் சி.தாமஸ் பிராங்கோ ராஜேந்திரதேவ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு  தலைவர் டி.தமிழரசு, மாநிலச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், மற்ற சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சேகரன், மனிஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் ஆயிரக்கணக்கான அதிகாரிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply