கோவை, ஆக.22- பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்து செவ்வாயன்று வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, வங்கிகளை இணைப்பது, கார்ப்பரேட் மற்றும் பெருமுதலாளிகள் வங்கிகள் தொடங்க அனுமதி அளிப்பது உள்ளிட்ட சீர்குலைவு நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கித்துறையில் காலியாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிடல் வேண்டும்.

பெருமுதலாளிகளிடமிருந்து பெறவேண்டிய வாராக்கடனை வசூலிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று ஒருநாள் வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் அனைத்தும் முடங்கின. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ரயில்நிலையம் முன்புள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியின் முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் மகேஸ்வரன், வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் வட்டத்தலைவர் சீத்தாராம் தலைமையில் கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட அதிகாரிகள் சங்கத் தலைவர் ஐசர்க் மற்றும் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர் ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில், பாலசுப்ரமணியம் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வங்கி ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மொத்தம் 333 தேசியமய வங்கிக்கிளைகள் உள்ளன. இந்த கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள், கடைநிலை ஊழியர்கள் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிகாரிகள் 2 ஆயிரத்து 500 பேர் என ஐயாயிரத்து ஐநூறு பேர் முழுமையாக இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் திருப்பூரில் உள்ள ஏற்றுமதிப் பிரிவு, சிறுதொழில் பிரிவு, வணிகப் பிரிவு என சிறப்புப் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வங்கிக் கிளைகளும் பூட்டப்பட்டிருந்தன. வெளிநாட்டுப் பரிவர்த்தனை, உள்நாட்டு வர்த்தக, தொழில், சேமிப்புப் பரிவர்த்தனைகள், காசோலை பரிவர்த்தனைகள் என அனைத்துவித வங்கி செலாவணி நடவடிக்கைகளும் முற்றாக நின்று போனது. ஒரு நாள் பரிவர்த்தனை மதிப்பு ரூ.1100 கோடி அளவு முடங்கியதாக வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் பெடரல் வங்கிக் கிளைமுன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய வங்கிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த உமாநாத், ராதாகிருஷ்ணன், சேகர், விஜயன், பெலிக்ஸ் பால்ராஜ் உள்ளிட்டோர் மத்திய அரசின் வங்கி விரோதக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்து உரையாற்றினர். இதில் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சேலம்: சேலம் கோட்டை ஸ்டேட் பேங்க் முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பணியாற்றும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply