சென்னை, ஆக.22 – தமிழகத்தின் தற்போதைய முதல் வர் எடப்பாடி கே. பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து விட்டதாக, டிடிவி தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. ஆட்சியில் நீடிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசானது, பெரும்பான்மையை இழந்துள்ளது.

அதிமுக-வில் கடந்த 6 மாதமாக, முட்டி மோதிக் கொண்டிருந்த ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டி, ஆட்சி அதிகார பேரம் படிந்ததைத் தொடர்ந்து, திங்கட் கிழமையன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோஷ்டியுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்திற்கு நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளுடன் துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. அதிமுக கட்சியிலும் ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்பட்டது. அவரது ஆதரவாளரான ‘மாஃபா’ பாண்டியராஜன் தமிழ் ஆட்சிமொழித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக்கப் பட்டார். கோஷ்டிகள் இணைப்புக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைத்திலிங்கம் எம்.பி., அதிமுக பொதுக் குழு கூட்டப்பட்டு, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று அறிவித்தார். இதனிடையே அணிகள் இணைப் பிற்கு எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர், திங்களன்று இரவு ஜெயலலிதா சமாதி முன்பு திடீர் தியானத்தில் அமர்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், 11 எம்எல்ஏவைத்திருக்கும் ஓ. பன்னீர்செல்வத் திற்கு, துணை முதல்வர் பதவி கொடுத்து, அவசர அவசரமாக கட்சியில் இணைக்க வேண்டிய கட்டாயம் எங்கிருந்து வந்தது? என்று முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பினர்.கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களித்தவர் ஓ. பன்னீர்செல்வம்; ஆனால் அவரையே தற்போது துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள்; இவை எல்லாம் போகட்டும் என்று விட்டுவிடலாம்; ஆனால், அன்றைய நெருக்கடியான நேரத்தில் எடப்பாடிக்கு வாக்களித்து அரசை காப்பாற்றிய எங்களிடம் அணி இணைப்பு பற்றி ஆலோசித்திருக்க வேண்டுமா? இல்லையா? என்றும் கேட்டனர்.

செவ்வாய்க்கிழமையன்று ஆளுநரை சந்தித்து, தங்களின் முறையீட்டை அளிக்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர். அதன்படி டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல் வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, அரங்கசாமி, முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை ஆகிய 18 எம்எல்ஏ-க்கள் செவ்வாயன்று காலை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். இவர்களுடன் விளாத்திக்குளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரியும் புதிதாக இணைந்து கொண்டார். காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மீதுதாங்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும் 19 எம்எல்ஏ-க்களும் தனித்தனியாக ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அளித்தனர்.

“கடந்த பிப்ரவரி மாதம் தங்களுக்கு அளிக்கப்பட்ட மனுவில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க நானும் மற்றும் 121 அதிமுக எம்எல்ஏ-க்களும் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டு இருந்தோம். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் நாங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தோம். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அரசு மீது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிருப்தி ஏற் பட்டுள்ளது. அவர் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார். பாரபட்சமாக நடந்து கொள்கிறார். அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துகிறார். அவர் ஆட்சியில் ஊழல் பரவி உள்ளது. கடந்த 4 மாதங்களில் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பில் இருந்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டுள்ளன. அவர் ஊழல் செய்வதாகவும், ஊழலுக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுவதால் அது எங்களது கட்சிக்கு அவப்பெயரையும், பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நான் அவருக்கு ஆதரவு அளித்தபோது முதலமைச்சர் பதவியை அவர் நேர்மையாகவும், பாரபட்சமின்றி செயல்படுவார் என்று நம்பிதான் ஆதரவு அளித்தேன். ஆனால் தற்போதைய சூழ்நிலை அப்படி இல்லை.இந்த மாத தொடக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும்போது, “தற்போதைய ஆட்சியில் ஊழல் முழுமையாக நடந்து வருகிறது” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசைத்தான் அவர் இப்படி விமர்சித்து இருந்தார். ஓ. பன்னீர்செல்வம் இப்படி பேட்டியளித்த 2 வாரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவையில் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொண்டு அவருக்கு துணை முதல மைச்சர் பதவியையும் வழங்கி உள்ளார். இது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரபட்சமாக செயல்படுவதையும், அரசு அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும் காட்டுகிறது.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டார். எங்களுக்கும் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. எனவே அவருக்கு அளித்து வரும் ஆதரவை நான் இந்த கடிதம் மூலம் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதே சமயத்தில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு நடப்பதை சுட்டிக்காட்டவே இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் இதை நான்செய்துள்ளேன்.எம்எல்ஏ-வுக்கு உள்ள இத்தகைய உரிமை பற்றி ஏற்கெனவே 13.5.2011 அன்று எடியூரப்பா – பாலச்சந்திரா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விவாதித்துள்ளது. எனவே எம்எல்ஏ என்ற முறையில் அந்த அடிப்படை உரிமையில் இந்த தகவலை நான் தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இனி நான் ஆதரவு அளிக்க முடியாது. எனவே தாங்கள் விவகாரத்தில் தலையிட்டு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த மனுவில் 19 எம்எல்ஏ-க்களும் கூறியிருந்தனர். 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் அதிமுக-வுக்கு 135 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர் உ. தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோரும் அடக்கும். இவர்கள் தவிர அதிமுககட்சிக்கு என 132 பேர் உள்ளனர். இவர் களில் தற்போது 19 உறுப்பினர்கள் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளதால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கான உறுப்பினர்களின் ஆதரவு 113 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், கூட்டணி கட்சி உறுப்பினர்களைச் சேர்த்தாலும் பெரும்பான்மைக்கு ஓரிடம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் எடப்பாடி அரசு கவிழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு மொத்தம் 98 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் திமுக-வுக்கு மட்டும் 89 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். ஓரிடம் ( ஆர்.கே. நகர்) காலியாக உள்ளது.

மு.க. ஸ்டாலின் கடிதம்: எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை 19 எம்எல்ஏ-க்கள் திரும்பப் பெற்றுள்ள நிலையில், அவரை சட்டப் பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, திமுக செயல்தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.இதேபோன்ற சூழ்நிலை ஒன்றின் போது, எம்எல்ஏ-க்கள் கடிதம் கொடுத்த உடனேயே கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை, சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டதையும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார்.

எடப்பாடி – ஓபிஎஸ் பதற்றம்: டிடிவி தினகரன் கோஷ்டி எம்எல்ஏக்கள், ஆதரவை திரும்பப் பெற்றதுடன், பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பது, எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆட்சியைக் காப்பாற்றுவது மற்றும் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிப்பது குறித்து, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களுடன் செவ்வாயன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி கூட்டறிக்கை: இதனிடையே, இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற உ. தனியரசு, கருணாஸ், தமீமுன் அன்சாரி ஆகியோர் செவ்வாயன்று மாலை கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். தமிழக அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தொண்டர்களின் கருத்தை அறிந்த பிறகு உரிய நேரத்தில் தங்களின் முடிவை அறிவிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியிருந்தஅவர்கள், தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசு வரம்பு மீறி செயல்படுவதாகவும் கண்டித்திருந்தனர்.

ஆளுநர் மூலம் சித்து விளையாட்டு: திவாகரன்: மறுபுறத்தில், அணிகள் இணைப்பு விவகாரத்தில் அமைச்சரவையை கேட்டு முடிவெடுத்திருந்தால் தற்போதைய நெருக்கடி நிலை வந்திருக்காது என்றும், பொறுப்பு ஆளுநரை மத்திய அரசு வைத்திருப்பதால் தான் பல சித்து விளையாட்டுகள் நடக்கின்றன என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவர் ப. தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: