கோவை, ஆக.22- ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கோவை, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அரசு பணிகள் மற்றும் பள்ளிகள் அனைத்தும் ஸ்தம்பித்தன. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தையே உடனடியாக அமல்படுத்த வேண்டும். 8ஆவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை கைவிட்டு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாயன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் அனைவரும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜேக்டோ- ஜியோ கூட்டமைப்பின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிங்கார வடிவேல், தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ரங்கநாதன், மாவட்ட செயலாளர் மதன் ஆகியோர் தலைமையில் ஜக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவாக பேரணியாக சென்று முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோவை மாவட்டச் செயலாளர் டெஸ்மா பாஸ்கரன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் மு.சாமிகுணம் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எஸ்.சிங்காரவடிவேல் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். முடிவில் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் டி.சிவக்குமார் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கிணத்துக்கடவு தாலுகாவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்: நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேந்தமங்கலம் பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு முருகேசன் தலைமை வகித்தார். கொல்லிமலையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தமிழ்மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.