கோவை:
கோவை மாநகராட்சி நிர்வாகம் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் கோவை மாநகராட்சியில் அதிமுக பிரதிநிதிகளின் இருந்த செல்வாக்கை விட பாஜகவினருக்கு கூடுதல் செல்வாக்கு இருந்து வந்தது. இது பல அதிமுகவினர் மத்தியிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியது.

 

குறிப்பாக பாஜக  வானதி சீனிவாசன்தான் அடுத்த மேயர் என்ற கோதாவில் பாஜக பல்வேறு அரசு திட்டப்பணிகளை பாஜகவின் வாக்குவங்கிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. வழக்கமாக இது போன்ற தலையீடுகளை விரும்பாத அதிமுக மற்றும் உள்ளூர் அமைச்சரும் இந்த முறை மவுனம் காத்து வந்தனர். இதன் பின்னணியில் தில்லி பாஜக தலைமையின் கையில் உள்ளூர் அமைச்சரின் ஊழல் சொத்துப்பட்டியல் அச்சுபிசகாமல் படித்து காட்டப்பட்டதாம். அதோடு மவுனமான அமைச்சர், ஈஷா யோகமைய தொடர்பில் சொத்துப்பட்டியலை பெயர் மாற்றம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள தூது அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விபரங்கள் முழுவதும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கும் விவரிக்கப்பட்டிருக்கிறது. இதனை வைத்து, சில கார்ப்பரேட் விளம்பர நிறுவனங்களுடன் இணைந்து கோவையில் தாமரையை மலர வைக்கும் ப்ராஜக்ட் அமலாக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்டங்களில் தன்னார்வலர்கள் போன்று வருங்கால பாஜக கவுன்சிலர் வேட்பாளர்களை களமிறக்கி வந்தனர். இதனை தெரிந்தும் உள்ளூர் அமைச்சர் மவுனமே சம்மதம் என்பது போல் எல்லாவற்றையும் வழிமொழிந்து வந்தார் என சில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை நகரம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக காவிக்கொடிகளாலும், பேனர்களாலும், சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களை  ஆக்கிரமிக்கும் வேலையில் சங்பரிவாரம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் அதன் உச்ச கட்டமாக மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள சோடியம் விளக்கு பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகளுக்கு மேல் காவிக்கொடி ஏற்றப்பட்டு பறக்கவிடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏற்கனவே பதட்டம் நிறைந்த கவுண்டம்பாளையம் முதல் துடியலூர் செல்லும் வழியில் உள்ள மின்விளக்குகள் முழுவதும் காவிகொடிகம்பமாக மாற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து இதுவரை மாநகராட்சி அதிகாரிகளோ, காவல்துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் இப்போதே பாஜகவிற்கு ஊழலை மறைக்க கைமாறாக வழங்கப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் கோவை மக்களிடம் தற்போது ஓர் அச்சம் உருவாகியிருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் திட்டமிட்டு சில இடங்களில் வன்முறையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. குறிப்பாக கொலை செய்யப்பட்ட இந்துமுன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலைக்கு பலிதீர்ப்போம் என்ற ரீதியில் போஸ்டர்களும் பல இடங்களில் ஒட்டப்பட்டிருக்கிறது. இது கூடுதல் பதட்டத்தை உருவாக்கியருக்கிறது. இந்நிலையில் இந்த வன்முறையின் போதும் காவல்துறை கைகட்டி நின்றால் கோவையின் நிலவரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: