புதுதில்லி, ஆக. 22 – ‘நீட்’ தேர்விலிருந்து தமிழக மாணவர் களுக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய பாஜகஅரசு உச்சநீதிமன்றத்தில் கடைசி நேரத்தில் கூறிகழுத்தறுத்துள்ளது. இதனால், ‘நீட்’ தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வை செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற்று, எப்படியும் மருத்துவ படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற தமிழகத்தின் கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.

மத்திய பாஜக அரசானது, அகில இந்திய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) வெற்றிபெறுவோரை மட்டுமே மருத்துவப் படிப்புக்கு சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு, அதை கட்டாயமும் ஆக்கியது. கொள்கையளவில் இதை ஏற்க மறுத்த தமிழக அரசு, ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்களிக்கும், இரண்டு மசோதாக் களை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அவற்றை குடியரசுத் தலைவரின் பார்வைக்கே மத்திய அரசு அனுப்பி வைக்கவில்லை. இதனிடையே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ‘நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பேரிடியானது. மாநில பாடத்திட்டத்தில் கட்- ஆப் 198 வைத்திருந்தவர்களால் கூட ‘நீட்’ தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது. இது தமிழக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தவே, அதை சமாளிக்கும் வகையில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவிகித உள்ஒதுக்கீடு ஒன்றை தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், அது செல்லாது என்று ஜூலை 14-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. உச்ச நீதிமன்றமும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி இத்தீர்ப்பை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழக அரசு ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டால் மத்திய அரசு ஒப்புதல் தரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இது புதிய நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. தமிழக அரசும் ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் தில்லியில் முகாமிட்டு, மத்திய அமைச்சரகங்களை தொடர்பு கொண்டு வந்தார். ஆகஸ்ட் 14-ஆம் தேதி தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதையறிந்த தமிழகத்தைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர்கள் சிலர் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குதொடர்ந்தனர்.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவாராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் கூட மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “நீட்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச்சட்டத்திற்கு சட்டப்படியான சிக்கல் எதுவும் இல்லை என்பதாலேயே மத்திய அரசின் அனுமதிதரப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “நீட் விவகாரத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும் என்றும், அந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும்” என்றும் கூறிய அவர், இந்த அவசரச் சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்றும் வாதிட்டார்.

அப்போது, “தமிழகத்தில் ‘நீட்’டில் தேர்ச்சி அடைந்தவர்கள் மற்றும் இத்தேர்வால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை, கிராமப்புறம் – நகர்ப்புற வாரியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 22 வரை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். ஆனால், செவ்வாயன்று இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “நீட்டிலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காது” என முன்பு ஆஜரான அதே கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா பல்டி அடித்தார். “நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் ‘நீட்’ முறைப்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் நிலையில், தமிழகத்துக்கு மட்டும் சலுகை வழங்கினால் அது மோசமான முன்னுதாரணமாகி விடும்” என்று புதிய ஞானோதயம் வந்தவர் போல துஷார் மேத்தா வாதிட்டார்.இதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திர நாத், ஆட்சேபம் தெரிவித்தார். “நீட் விவகாரத்தில் மத்திய அரசின் திடீர் நடவடிக்கையால் தமிழகத்தில் ஏராளமானகிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். “இந்த விஷயத்தில் மாநில மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசே சட்டமியற்றி தமிழகத்துக்கு விலக்கு அளித்திருக்க வேண்டும்”என்றும் அவர் கூறினார்.

அப்போது, குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், “இது தொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளில் தெளிவுபடுத்திய பிறகும், ஓராண்டுக்கு விலக்கு பெற தமிழக அரசு அவசரச் சட்ட வரைவை இயற்றியது ஏன்?” என்றுகேள்வி எழுப்பினார். அத்துடன், “நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது” என்று தீர்ப்பளித்த அவர், “தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை ‘நீட்’ தேர்வு அடிப்படையில் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டார். இதன்மூலம் நடப்பாண்டில் ‘நீட்’ தேர்வு அடிப்படையிலேய மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற துயரம் அரங்கேறுகிறது. ஓராண்டுக்கு விலக்கு அளிக்கத் தயார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மூலம் ஆசைவார்த்தையை நம்பிய தமிழக மாணவர்கள் தற்போது கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். மத்திய பாஜக அரசின் கடைசி நேரகழுத்தறுப்பு, தமிழக ஏழை – எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நொறுக்கிப்போட்டுள்ளது.

உறுத்தல் இல்லாத தம்பிதுரை: இதனிடையே, ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக அதிமுக-வைச் சேர்ந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். “நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம்; பிரதமர் மோடி கூட தமிழகத்துக்கு விலக்களிக்க முயற்சி செய்தார். எனினும் முடியவில்லை; தமிழக அரசு சார்பில் நீட் குறித்து அவசர சட்ட மசோதா தான் கொண்டுவர முடியும்? வேறு என்ன செய்யமுடியும்?” என்று அவர் கேட்டுள்ளார். எப்போதும் தமிழக விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் பாஜக தலைவர் எச். ராஜா, ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் தர்மம் வென்றுள்ளதாகவும், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் வழக்கம்போல துள்ளிக் குதித்துள்ளார்.

இன்று தரவரிசைப் பட்டியல் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, “ஆகஸ்ட் 23-ஆம் தேதி மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்; அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும், ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் மற்ற மாணவர்களுக்கான சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும்” என்று தமிழக சுகாதாரத் துறைசெயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.மாணவர்கள் நாளை போராட்டம்நீட் அநீதிக்கு எதிராக ஆகஸ்ட் 24 அன்று தமிழகம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்துமாறு அனைத்துப் பகுதி மாணவர்களுக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், செயலாளர் பி.உச்சிமாகாளி அழைப்பு விடுத்துள்ளனர்.

 

நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துக் கட்சிகள் அறிவிப்பு

சென்னை, ஆக.22- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் செவ்வாயன்று மாலை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேருவதற்கு வலுக்கட்டாயமாக “நீட்”நுழைவுத் தேர்வை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில்உள்ள அதிமுக அரசும் திட்டம் போட்டு திணித்து, கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விகனவை சீர்குலைத்து விட்டது. சமூக நீதியை சிதைத்து இருக்கும்மத்திய – மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

“நீட்” நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒரு மனதாக நிறை வேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் பூட்டி வைத்துக் கொண்டு சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு தமிழகத்தில் “நீட்” தேர்வை மத்திய பாஜகஅரசு கொண்டு வந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மாநில சட்டமன்றத்தின்உணர்வுகளை கொச்சைப்படுத்தியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, மத்திய- மாநில உறவுகளையும், கூட்டாட்சி தத்துவத்தையுமே “கேலிப் பொருள்” ஆக்கிட முனைந்து செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்துக் கொள்ளும் பா.ஜ.க.வின் இந்த ஆணவப் போக்கிற்கு, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு ஓங்கி குரல் கொடுக்காமல், பணிந்து துணை போகிறது.

மாநில பாடத்திட்டத்தில் படித்த 98 சதவீத மாணவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேர விரும்பும் அரசு மருத்துவர்களின் நலனை காற்றில் பறக்க விட்டு மத்திய – மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கை நடத்தியிருப்பதும், வாதிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது. தற்காலிகமாக ஓராண்டு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய பாஜக அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அறிவித்து, அந்த குறைந்தபட்ச விதிவிலக்கும் கிடைக்காத அளவிற்கு இன்றைக்குமத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத் தில் வாதத்தை முன் வைத்திருக்கும் பாஜக அரசின் இரட்டை வேடம் தமிழகமக்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அதிமுக அரசின் நிர்வாக திறமை படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆகவே “நீட்” தேர்வை திணித்து தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள் கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கி, மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்த துரோகத்திற்குசம பங்குதாரர்களாக இருக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து 24-8-2017 ஆம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் “மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்” காலை 10 மணி அளவில் நடைபெறும். மாணவர்களும் – அனைத்து கட்சி தொண்டர்களும் – பொதுமக்களும் பங்கேற்று, “நீட்” தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற வைத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: