வேலூர் பாகாயம் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம் (42). இவர், மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்தியலட்சுமி  (34). இவர், கண்ணமங்கலத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியை நிர்வகித்து வந்தார்.

இந்தப் பள்ளியிலேயே நித்தியலட்சுமி தலைமை ஆசிரியையாக இருந்தார். அவர்களுக்கு அபிதாசிறீ (17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். சிவசுப்பிரமணியம், நித்தியலட்சுமி ஆகியோர் தங்களது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். அதன்படி அபிதாசிறீயும் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் நன்கு படித்து பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றார். ‘நீட்’ தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், நித்தியலட்சுமி தனது மகளுக்கு மருத்துவப் படிப்புக்கு ‘சீட்’ கிடைக்குமா, கிடைக்காதா? என்று சிந்தனையிலேயே இருந்து வந்தார். தனது மகளின் மருத்துவப் படிப்புக்கு ‘சீட்’ கிடைக்காது என அவர் நினைத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நித்தியலட்சுமி வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறைக்கு சென்றார். வெகுநேரம் ஆகியும் கீழே வராததால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாகாயம்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர்  சசிகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: