திருப்பூர், ஆக. 22 – கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உதவித் தொகைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. சிஐடியு கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் தாலுகா 11 ஆவது மாநாடு தலைவர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். துணைச் செயலாளர் ஆர்.செல்வகுமார் வரவேற்றார். சங்க செயலர் டி.குமார் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராஜன் உரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து, கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய உதவித் தொகைகளை இரட்டிப்பாக்க வேண்டும். விபத்து நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தியதைப் போல் இயற்கை மரண நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும், கேரள மாநிலத்தில் இருப்பது போல் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனையும், வீடு கட்ட வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும், மேற்கு வங்கம், திரிபுரா போல் பிஎப் திட்டம், கர்நாடகம் போல் கல்வி உதவித் தொகை ரூ.20 ஆயிரம், திருமண உதவித் தொகை ரூ.50ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூன்று கமிட்டிகளாக பிரிப்பு: மேலும், இம்மாநாட்டில் கட்டுமானத் தொழிலாளர் சங்க திருப்பூர் தாலுகா கமிட்டியை திருப்பூர் தாலுகா வடக்கு, மேற்கு, தெற்கு கமிட்டி ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, திருப்பூர் தாலுகா வடக்கு கமிட்டி தலைவராக சுப்பிரமணியம், செயலாளராக கொண்டப்பன், பொருளாளராக ராஜூ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேற்கு கமிட்டியின் தலைவராக சௌந்தரராசன், செயலாளராக பத்மநாபன், பொருளாளராக செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தெற்கு கமிட்டியின் தலைவராக ஆறுமுகம், செயலாளராக செல்வகுமார், பொருளாளராக செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநிலக்குழு உறுப்பினர் எம்.கணேசன் நிறைவுரை ஆற்றினார்.

Leave A Reply

%d bloggers like this: