திருப்பூர், ஆக. 22 – பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், குளறுபடிகளைக் களைந்து 8ஆவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்கவும், பலவித ஊதிய விகிதங்களைக் களைந்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ- ஜியோ) திருப்பூரில் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் ஸ்தம்பித்தது.திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் உட்பட மாவட்டத்தின் அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள், வளர்ச்சித்துறை, சத்துணவு, அங்கன்வாடி உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களில் 85 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

அதேபோல் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தங்களில் பங்கேற்றனர். இதனால் மாநகராட்சி, நகராட்சி மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாத நிலையில் கல்விப்பணி முடங்கியது. அரசு நிர்வாகத்தின் வாய்மொழி உத்தரவாக தனியார் பள்ளி நிர்வாகங்களைக் கட்டாயப்படுத்தி, அங்கு பணியாற்றும் ஆசிரியர்களை அருகாமையில் இருக்கும் அரசுப்பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அத்துடன் அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழுக்கள் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் என முன்கூட்டியே தெரிந்த நிலையில் மாணவர்கள் வருகை வெகுவாகக் குறைந்திருந்தது.

அதேசமயம் பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. வெறுமனே அமர வைக்கப்பட்டு பழைய பாடங்களை படிக்குமாறு மாணவர்களை தற்காலிக ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். மாவட்டத்தில் உள்ள 1,200க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 90 சதவிகிதம் ஆசிரியர்கள் வேலைக்குச் செல்லவில்லை, உயர்நிலை பள்ளிகளில் 3,700 ஆசிரியர்களில் 2,800க்கும் மேற்பட்டோர் வேலைக்குச் செல்லவில்லை. மொத்தத்தில் மாவட்டம் முழுவதும் அரசு நிர்வாகம் மற்றும் கல்விப் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் ஜெ.ஜெ.ஜோசப், சந்திரசேகர், செல்லகுமார், சுந்தரமூர்த்தி, முரளி, செல்வக்குமார், மோகன்குமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் அம்சராஜ், ச.முருகதாஸ், மூர்த்தி, மகேந்திரபூபதி, பாக்கியம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது போராட்டத்தை வாழ்த்தி நிறைவுரை ஆற்றினார்.

தாராபுரம்: தாராபுரத்தில் ஜாக்டோ – ஜியோ ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை விளக்கி கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொருளாளர் சத்தியவாணி முத்து, பாலசுப்பிரமணியம், பார்த்திபன், செல்வராஜ், ஈஸ்வரமுர்த்தி ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உடுமலை: உடுமலை , குடிமங்கலம் பகுதிகளில் பணியாற்றும் அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் தங்கள் அலுவலகங்களுக்கு செல்லாமல் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஒருக்கிணைப்பாளர் ஆ.தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை செயலாளர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுலகங்கள் முன்பும் அந்தந்த பகுதி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Leave A Reply

%d bloggers like this: