மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கைவிடச் செய்வதற்காக நவம்பர் மாதம் 5 லட்சம் தொழிலாளர்களை அணிதிரட்டி, தொடர்ந்து மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. சிஐடியு தமிழ் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான் இதைக் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் முன்னணி ஊழியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் ஒகேனகலில் நடைபெற்றது.
முதல் நாள்  காலை சம்மேளனத் துணைத் தலைவர் பொன்கிருஷ்ணன் தலைமையில் உள்ளாட்சி ஊழியரும், சட்டமும் என்ற தலைப்பில் துணைத் தலைவர் கே.முத்துராஜ் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து சம்மேளனத் தலைவர் நா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான் பேசினார்.

உலகம் முழுவதும் தொழிலாளர்களின் கூலியின் மீது முதலாளித்துவம் யுத்தம் நடத்தி வருகிறது. தொழிலாளர்களின் நிரந்தரப் பணி, சமூகப் பாதுகாப்பு விசயங்களை கைவிட்டு, அவர்களை தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி என தாக்குதல் நடத்தப்படுகிறது. எனவே இந்த கூலி அடிமை முறையில் இருந்து விடுதலை பெறுவதற்குப் போராட வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமை என்றார்.

தற்போது தொழிலாளர்கள் தங்கள் சம்பளம், போனஸ் போன்ற கோரிக்கைகளுக்காக மட்டும் போராடினால் போதாது. அரசு  எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்கிவருகிறது. கல்வி, மருத்துவம் மட்டுமின்றி, அரசு நிறுவனங்கள் என எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றனர். எனவே உடனடியான பிரச்சனைகளிலும் தொழிலாளர்கள் போராட வேண்டும். தனித்தனி துறையில் அந்தந்த பிரிவு தொழிலாளர்கள் மட்டும் போராடினால் போதாது. எல்லா துறைகளில் இருக்கும் அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தொழிலாளர்களின் நலன்களைக் காக்க நவம்பர் மாதம் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் டில்லியில் மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த  உள்ளனர்.  அதற்குத் தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. அதில் அனைத்துப் பகுதி தொழிலாளர்களையும் அணிதிரட்டிப் பங்கேற்கச் செய்து, மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைப் பின்வாங்கச் செய்வோம் என்று கருமலையான் கூறினார்.

துணைத் தலைவர் ப.சண்முகம் தலைமையில் நடைபெற்ற அமர்வில் “வகுப்புவாத அபாயமும், தொழிற்சங்கப் பணியும்” என்பது குறித்து சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் விளக்கிக் கூறினார். இரண்டாம் நாள் அமர்வில் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் செயல்பாடு, வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் நிறைவுரை ஆற்றினார்.  முகாமில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் நூறு பேர் பங்கேற்றனர். நிறைவாக தர்மபுரி உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகி செல்வம் நன்றி கூறினார். இந்த முகாமுக்கு சிஐடியு தர்மபுரி மாவட்டச் செயலாளர் சி.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: