ஈரோடு, ஆக. 22- ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ சார்பில் நடைபெற்ற ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள், 7 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை, வருவாய் துறை, வணிக வரித்துறை ஊழியர்கள் என சுமார் 22ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மேலும், இப்போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஜாக்டே- ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம், சுகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் குமரேசன், ஜாக்டே ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்து. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல், கோபி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசேகர் தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.ஆனந்த், கணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர், சங்க நிர்வாகி டி.பி.பிரபாகரன், அரசு பணியாளர் சங்க நிர்வாகி எம்.விஷ்ணு குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ச.நேரு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், தாளவாடி ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Leave A Reply