மோடி அரசின் இன்னுமொரு தாக்குதல்
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள முறைசாராத் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக ஜன பீம யோஜனா (ஜே.பி.ஓய்) துவக்கப்பட்டது. பின்னர் அதுவே பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆம் ஆத்மி பீம யோஜனா (ஏஏபிஜேஒய்) என சமூக பாதுகாப்பு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள்,  தொண்டுநிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் “நோடல் ஏஜென்சியாக’ செயல்பட முடியும். நோடல் ஏஜென்சி ஒரு வருடத்தில் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் போடலாம்.

பல ஆய்வுகளில் சாதாரணமாக ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நடுநிலைப் பள்ளி படிப்போடு நின்று விடுவது தெரியவந்துள்ளது. எனவே தொழிலாளர்கள் பிள்ளைகளின் கல்வி உதவி நிதியாக 9,10,11,12ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிக்கும் இரு குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.600 வீதம் இரு தவணையாக ரூ.1,200 வழங்கி வருகிறது இந்த குழுக் காப்பீடு  திட்டத்தின் ஆண்டு பிரிமியம் ரூ.200 ஆகும். இதில் 50 சதம் மானியமாக ரூ.100ஐ மத்திய அரசு செலுத்தும். மீதம் ரூ.100 பிரிமியமாக திட்டத்தில் சேரும் பயனாளிகள் செலுத்த வேண்டும். குழுக் காப்பீடு திட்டத்தில் முறைசாரா தொழிலாளர்கள் இயற்கை மரண நிதி ரூ.30 ஆயிரம், விபத்து மரண நிதி ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. விபத்தில் ஊனம் அடைந்தால் அதற்கேற்ப இழப்பீடும் வழங்கப்பட்டு வந்தது. மீனவர், ரிக்ஷா இழுப்போர், வீட்டுவேலை செய்யும் பணியாளர், கட்டுமானத்தொழிலாளி, போன்ற 48 வகையான நலிந்த பிரிவினர்களின்  ஆம் ஆத்மி காப்பீடு திட்டத்தில் 31.03.2016 வரை ஐந்து கோடிப் பேர் சேர்ந்து பயனடைந்து வந்தனர்.

மோடி அரசு ஆட்சிப்பொறுப்பில் வந்ததிலிருந்தே தூய்மை இந்தியா, ஊழலற்ற இந்தியா, கறுப்பு பண ஒழிப்பு என வாய் சவடால் விட்டுக் கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு கோடிக்கணக்கில்  பல்வேறு சலுகைகளை கூடுதலாக வழங்குவதும், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான கேஸ் மானியம், உணவுப்பொருள் மானியம், நூறு நாள் வேலைத்திட்டம் போன்றவற்றை குறைப்பதும் சீர்குலைப்பதுமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில மாதங்களுக்கு முன்பாக ஆம் ஆத்மி திட்டத்தில் சேரும் தொழிலாளர்களின் ஆதார் எண், மொபைல் எண்கள், வங்கி கணக்கு முழு விவரம் ஆகியவற்றை தர வேண்டும் என்று மோடி அரசு எல்ஐசிக்கு சுற்றறிக்கை அனுப்பியது. தீடிரென ஜூலை 20ஆம் தேதியிலிருந்தே ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம் இனி பிரதம மந்திரி ஜீவன் ஜோதி காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படுகிறது என மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சரகம் அறிவித்துள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், கால அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக ஆம் ஆத்மி திட்டத்தை நிறுத்தியுள்ளது.

தற்போது மாநில அரசு துறைகள், அரசாங்க முகமைகள் அல்லது கூட்டுறவு சங்கங்கள்  ஆகியவை மட்டுமே இத்திட்டத்தில் “நோடல் ஏஜென்சி” ஆக செயல் பட முடியும். நோடல் ஏஜென்சிக்கு வருடத்திற்கு ஒரே ஒரு பாலிசி தான் 1.6.2018 அன்று துவங்கும் வகையில் எடுக்க முடியும். இந்த திட்டத்தின் ஆண்டு பிரிமியம் ரூ.342 (ரூ.330 PMJJBY + ரூ.12- PMSBY) 18 வயதிலிருந்து 50 வரை உள்ளவர்கள் மட்டுமே சேர்க்கமுடியும். இதில் பிரியமாக ரூ.171  செலுத்த வேண்டும். சாதாரணமாக இறப்பு விகிதம் அதிகம் இருக்கக்கூடிய 51 வயதிலிருந்து 59 வயதுவரை சமூகப்பாதுகாப்பு என்ன என்பது கேள்வி குறியாகவே உள்ளது. பாலிசிதாரர் இயற்கை,விபத்து மரணத்தின் போது ரூ.2 லட்சம் கிடைக்கும், இதில் தொழிலாளர்கள் மட்டுமல்ல வங்கியில் சேமிப்பு கணக்குள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இதுவரை AABY திட்டத்தில் கிடைத்து வந்த பள்ளி கல்வி உதவித்தொகை ரூ.1200 கிடைக்காது.   அது மட்டுமின்றி இனி மத்திய அரசின் சமுதாயப் பாதுகாப்பு நிதியிலிருந்து வேறு எந்த திட்டத்திற்கும் மானிய உதவி வழங்கபட மாட்டாது என அறிவித்துள்ளது.

போதுமான புதிய நோட்டுக்களை அச்சடிக்காமலேயே, ஏடிஎம்களில் தேவையான தொழில்நுட்பத்தை அமுல்படுத்தாமல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை போலவே இந்த நடவடிக்கையை மோடி அரசு அறிவித்துள்ளது. இந்த சமூக பாதுகாப்புத் திட்டம் உடனடியாக செயலுக்கு வரப்போவதில்லை. இடையில் ஏற்படும் இயற்கையான மரணம் மற்றும் விபத்து மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது?

தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள அரசு முகமைகளோ நோடல் ஏஜென்சிகளோ எப்படி சாதாரண மக்களை அணுகமுடியும்? ஏற்கனவே மாநில அரசின் நல வாரிய குளறுபடிகளை எதிர்த்து தொடர்ச்சியாக இயக்கங்களை தொழிற்சங்கங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி நோடல் ஏஜென்சியாக அரசின் துறைகள் செயல்படும் என்றால் அதற்கான பணியாளர்களோ, அடிப்படை கட்டுமான வசதியோ இல்லாமல் எப்படி செயல்படுத்த முடியும். திட்டம், பலன் எல்லாம் வெறும் ஆவணங்களில் மட்டுமே அரசின் விளம்பரத்திற்காக மட்டுமே இருக்கும் நிலை ஏற்படும். கேரளம் போன்ற இடதுசாரி அரசுகள் ஆளும் மாநிலங்களில் மாநில தொழிலாளர் துறை முன்முயற்சி எடுத்து செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லா சமுக நலத் திட்டங்களையும் பிரதமர் பெயரில் தான் இருக்க வேண்டும் என்ற அரசியல் ஆதாய நோக்கத்தோடு  எல்லா திட்டங்களையும் ஒருங்கிணைத்துள்ளனர். மத்திய அரசு தான் மக்களுக்காக செலவிடுகிறது என்பதை விளம்பரப்படுத்துவதற்காக தான் இந்த ஏற்பாடு. நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பல்வேறு வகையில் உதவி  வரும் பொதுத்துறை ஆயுள் மற்றும் பொது காப்பீடு நிறுவனங்களை தனியாருக்கும் அந்நியருக்கும் தாரை வார்க்கும் முயற்சியில் தொடர்ச்சியே இந்த நடவடிக்கை எனலாம். முறைசாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு  கிடைத்து வந்த  கல்விஉதவித்தொகை போன்ற சிறு உதவிக்கும் வேட்டு வைக்கப்படுகிறது.
– கட்டுரையாளார் தமிழ்நாடு மீன் பிடி தொழிலாளர் சம்மேளன பொருளாளர்.

Leave A Reply