வீழ்ச்சியுற்ற சமுதாயத்தின் விடுதலைப் பாடகன்; மிதிபட்டுக் கிடந்த சமூகத்தின் மெய்க்காவலன்; மனிதகுல அநீதிகளுக்கு மரணகீதம் இசைத்தவன்; ஏழைகளின் இருதயமூர்த்தி; உழைக்கும் வர்க்கத்தின் முகத்திலே உயிர்க்களையைத் தோற்றுவித்தவன்; தொழிலாளி வர்க்கத்தின் வியர்வையிலே ஆனிமுத்து உண்டு, அக்கினிப் பிழம்பு உண்டு என்று எடுத்துக் காட்டியவன்; உலகத்திலே பரவியிருக்கின்ற எந்த மதங்களையும் விட, அதிகமான அளவுக்கு உலக மக்கள் தொகையிலே மூன்றிலொரு பகுதியைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற ஒரு மிகப்பெரிய தத்துவத்தைத் தந்த வித்தகன்; விஞ்ஞான சோசலிசத்தைத் தந்த மெய்ஞானி, காரல் மார்க்ஸ்.

மார்க்சீய சித்தாந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று சொல்லுவதற்கு, தணிகைச் செல்வன் அவர்கள் ஒரு கவிதையின் மூலமாகப் பதில் எழுதியிருந்தார்கள். அது என் நினைவிலே நிழலாடுகிறது. மார்க்சீயம் காலம் கடந்தது என்று சொல்கிறார்கள்; அது ஓரளவு உண்மை தான். ஏனென்றால், அது காலத்தைக் கடந்து நிற்கிறது; ஆகவே, அங்கீகரிக்கிறோம். ஆனால், காலாவதியாகிவிட்டது என்று சொல்வதில் ஒரு திருத்தம்; அது காலாவதி ஆகவில்லை. கால விதி ஆகிவிட்டது; காலகாலங்களுக்கும் விதி ஆகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அப்படி வளர்ந்து கொண்டிருக்கின்ற, வென்று கொண்டிருக்கின்ற, வாழ்ந்து கொண்டிருக்கின்ற, மிகப் பெரியத் தத்துவத்தை உலகத்துக்கு வழங்கியவர் காரல் மார்க்ஸ் அவர்கள்.

பாற்கடலிலே ஆலகால விஷமும் பிறந்தது; அங்கே தான் அமுதமும் பிறந்தது என்பார்கள். அதைப்போல, எந்த ஜெர்மெனியிலே ஹிட்லர் தோன்றினானோ, எந்த ஜெர்மனியிலே தோன்றிய ஹிட்லர் உலக உருண்டையை உதைபந்தாக்கி நான் விளையாடப் போகிறேன் என்று கொக்கரித்தானோ, அந்த ஹிட்லர் பிறந்த ஜெர்மனியில் உலக மக்களை, உயிர்க்குலத்தை வாழ வைக்கின்ற தத்துவத்தைத் தந்த ஒப்பற்ற மேதை காரல் மார்க்ஸ் அவர்கள் பிறந்தார்கள்.

ஹிட்லர் “ மெயின் கேம்ப்” என்கிற புத்தகத்தை எழுதினான்; அதன் மூலமாக இனவெறியைத் தூண்டினான். அவன் எழுதியிருக்கின்ற அந்த “ மெயின் கேம்ப்” புத்தகத்தை வைத்துக் கொண்டு, அவனாலே படுகொலை செய்யப்பட்ட யூத இனத்தவரின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, ஒப்பிட்டுப் பார்த்து அறிஞர்கள் சில கருத்தைச் சொல்வதுண்டு. அந்த “மெயின் கேம்ப்” புத்தகத்தினுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும், 120 யூதர்கள் பலியாகியிருக்கிறார்கள்; ஒவ்வொரு பக்கத்திற்கும், 4,700 யூதர்கள் பலியாகியிருக்கிறார்கள்; ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், 1,20,000 யூதர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்று குறிப்பிடுவதுண்டு.

ஹிட்லருடைய அமைச்சரவையில் “Minister For Death” என்று யூதர்களைக் கொல்வதற்காகவே ஓர் இலாகாவை உண்டாக்கி, யூத இனத்தை “ பிரபஞ்சத்தின் களை” என்று வர்ணித்துப் பழிவாங்கியவன். அப்படிப்பட்ட ஜெர்மனியிலே தோன்றிய மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள், உலக சமுதாயத்திலே ஒரு மிகப்பெரிய, உயரிய நடைமுறைக்குரிய தத்துவத்தைத் தந்து, அந்தத் தத்துவத்தின் மூலமாக மிகப்பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கிக் காட்டினார். அவர் குறிப்பிட்டுக் கூறுவதைப் போல, இதுவரைக்கும் தோன்றிய எத்தனை எத்தனையோ தத்துவ ஞானிகள்; எத்தனை எத்தனையோ மாமேதைகள்; எத்தனை எத்தனையோ வித்தகர்கள் உலகம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும்தான் சொன்னார்கள். ஆனால், உலகத்தை மாற்றிக் காட்டுகின்ற ஒரே ஒரு தத்துவம், ஒப்புயர்வற்ற தத்துவம் காரல் மார்க்சினுடைய தத்துவமே தவிர வேறு எதுவுமில்லை; என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை!

இராமாயணத்தைப் படிக்கிறவர்கள் சொல்வதுண்டு. இராமாயணத்திலே வருகின்ற அனுமான், அவனது சொந்த வலிமையை அவனுக்கு இருக்கின்ற ஆற்றலை – திறமையை, திண்மையைப் புரிந்து கொள்ளாமல் இருந்தான். வயதிலே முதிர்ந்தவராகிய ‘ ஜாம்பவான்’ அனுமானுடைய வரலாற்றை எடுத்துச் சொல்லி, அவருக்கிருக்கின்ற ஆற்றலைச் சொன்னதற்குப் பிறகு தான் அவன் பேருருவம் கொண்டு, இலங்கைக்குக் கடலைத் தாவி சென்று சீதைக்குத் தூது சொல்கின்ற அளவுக்கு ஆற்றலைப் பெற்றான். அதைப் போலத் தான் உழைக்கும் வர்க்கம் என்கின்ற அனுமான், தன்னுடைய ஆற்றலை, தனக்கிருக்கின்ற திறமையைப் புரிந்து கொள்ளாமல் இருந்தது. அந்த உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர் வர்க்கத்தின் தகுதி என்ன? ஆற்றல் என்ன? திறமை என்ன? என்பதை எடுத்துரைத்த ‘ஜாம்பவான்’ தான் காரல்மார்க்ஸ் அவர்கள் என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

சுரண்டும் வர்க்கம் காணுகின்ற சொப்பனங்களில் கூட, கலகக் கொடி பிடித்து எங்கள் கைகள் உயர்ந்து வரும் என்று தொழிலாளி வர்க்கம் முழங்கியது என்றால், ‘கோடிக் கால் பூதம்’ என்று ஜீவா அவர்கள் குறிப்பிடுவார்களே அந்த அளவுக்கு ஆற்றல் மிக்கதாகத் தொழிலாளி வர்க்கம் உயர்ந்தது என்றால், அதை எடுத்துரைத்த மாபெரும் மேதை காரல் மார்க்ஸ் அவர்கள். உரிமைகளை நாம் போராட்டமில்லாமல் அடைய முடியாது; உணர்ச்சிகளை ஆயுதங்கள் அடக்குவதில்லை; இழக்கப் போவது விலங்குகளே தவிர, வேறெதுவுமில்லை; எங்களுக்கே புது உலகம்! இனிப் பொறுப்பதில்லை என்று தொழிலாளி வர்க்கம், உழைக்கும் வர்க்கம் ஆர்த்தெழுந்து போர்ப்பாட்டுப் பாடியதென்றால், அதை ஆக்கித் தந்தவர், அத்தகைய ஆற்றலை, உற்சாகத்தை உருவாக்கித் தந்தவர் மாமேதை காரல்மார்க்ஸ் அவர்கள்.

எத்தனை எத்தனையோ தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள்; தத்துவத்தை மட்டும் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால், தத்துவத்தை மட்டும் சொன்னதோடு அல்ல; அந்தத் தத்துவத்தை வழி நடத்தியும் சென்றவர் காரல்மார்க்ஸ் அவர்கள் என்பதனை அவரது வரலாறு குறிப்பிட்டுக் கூறுகிறது. மனித சமுதாயத்தில் இருக்கின்ற ஏழ்மையை, மனித சமுதாயத்திலே நெளிகின்ற வறுமையை, மனித சமுதாயத்தில் தாண்டவமாடுகின்ற தரித்திரத்தைப் பார்த்து எத்தனையோ பேர் மனம் கலங்கியதுண்டு. இந்த அளவுக்கு நிலைமை இருக்கிறதே…! ஒரு பக்கத்திலே செல்வக்குவியலுமாய் இருக்கிறதே என்று வேதனையைத் தெரிவிப்பதுண்டு.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று அருளாளர்கள் நெஞ்சம் நெகிழ்ந்ததுண்டு. ஒரு மனிதனுக்குப் பசி ஏற்படுகின்ற நேரத்தில், அந்தப்பசி எந்த அளவுக்கு மனிதனைத் துரத்துகிறது என்பதனையெல்லாம் சுட்டிக் காட்டுவதுண்டு. புராணத்திலே கூடச் சொல்லுவார்கள்; விஸ்வாமித்திர முனிவருக்கே பசி வந்த போது, சண்டாளனின் குடிசையில் நாயின் இறைச்சியைத் தின்றார் என்று சொல்வதுண்டு. பசி அந்த அளவுக்கு மனிதனை ஆட்டிப்படைக்கிறது. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் – என்றெல்லாம் பாடி வைத்தார்கள். நடுத்தெருவில் நாய்களோடும் தனது பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக சண்டை போடுகிற அளவுக்கு நிலைமையைக் காணுகின்றோம்.

Leave A Reply