இயற்கை எரிவாயு எடுத்துச் செல்வதற்கான குழாய் அமைக்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்த விவசாயிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு நோட்டீஸ்  வழங்கி வருகிறது.

ராணிப்பேட்டை பகுதியில் எரிவாயுக்  குழாய்கள் பதிக்க விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.  கடந்த பிப்ரவரி மாதம், இந்தியன் ஆயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பாதையை செயற்கைக் கோள் மூலம் வரைபடம் தயாரித்து, அப்பாதை செல்லும் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அடையாளக் கற்களை நட்டனர்.

சென்னை எண்ணூரிலிருந்து திருவள்ளூர், பெங்களூரு, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை வழியாக தூத்துக்குடி வரை இயற்கை எரிவாயுவை குழாய்கள் மூலம் எடுத்து செல்ல இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள எடப்பாளையம், லாலாப் பேட்டை, தண்டுகாரன் வீதி, நெல்லிக்குப்பம், நெல்லிக்குப்பம் மோட்டூர், கத்தாரிகுப்பம், குமணந்தாங்கல், கொண்டகுப்பம், பள்ளேரி, வசூர், கோடியூர் உள்பட 15 கிராமங்களில் உள்ள நிலங்களில் சில மாதங்களுக்கு முன்பு குறியீட்டுடன் கூடிய கற்கள் நடப்பட்டன. இந்த கற்களின் மீது ஆயில் நிறுவனத்தின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. விவசாயிகளின் அனுமதியில்லாமல் இந்த கற்கள் நடப்பட்டது.

இதனால் விஷவாயுவை குழாய்கள் மூலம் எடுத்துச் செல்வதற்குத் தான் நிலங்களில் இந்த அடையாள கற்கள் நடப்பட்டுள்ளது எனக் கருதிய விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மூலமாக விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்க சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. நோட்டீசில் நிலத்தின் வழியாக எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்க இருப்பதாகவும், இதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் 21 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அஞ்சல் மூலமாகவோ, நேரிலோ அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் அந்தந்த ஊர்களில் உள்ள கிராம சிப்பந்திகளின் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கிராம மக்களும் கலக்கமடைந்து உள்ளனர். விவசாயிகள் சிலர் நோட்டீசை வாங்க மறுத்து வருகின்றனர். விவசாய நிலங்களின் வழியாக பைப்லைன் புதைப்பதைக் கைவிட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் எல். சி. மணி கூறுகையில், “வேலூர் மாவட்ட ஆட்சியருக்கோ, மாவட்ட நிர்வாகத்திற்கோ எதுவும் தெரியாது. எனக் கூறி வரும் நிலையில், வருவாய்த்துறை  ஊழியர்கள் மூலம் விவசாயிகளை சந்தித்து  நோட்டீஸ் கொடுத்து வருவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்.இதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாகமும் தான் விளக்கம் அளிக்க வேண்டும் மேலும்,  விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply