சேலம், ஆக. 22- சேலம் மாவட்டத்தில் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது- ஹோட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள், இறைச்சிக் கடைகள், டீ கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர உணவு வியாபாரிகள், உணவுப் பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட 2006-ன் கீழ் உரிமம் பெற வேண்டியது அவசியம்ஆகும்.

வணிகர்கள் மட்டுமல்லாது மாவட்டத்தில் நடைபெறும் அன்னதானங்கள் போன்றவற்றிற்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறுவது அவசியமாகும். அவ்வுரிமத்தினை பெற விரும்புவோர் www.fssai.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து ப்ரிண்ட செய்து தங்களது கையொப்பமிட்டு இணையத்தளத்தில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறுவதற்கு உணவுப் பாதுகாப்புத் துறையை மட்டுமே அணுக வேண்டும் எனவும் இடைத்தரகர்கள் எனக்கூறிக்கொள்ளும் எந்த நபர்களையும் உணவு வணிகர்கள் நம்பி ஏமாந்துவிட வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. கூடுதல் உரிம கட்டணம் அல்லது சட்ட முறைகேடு குறித்து உணவு வணிகர்கள் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் மாவட்ட நியமன அலுவலரை 94431 58399 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது 94440-42322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிலோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு 0427-2448735 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply