முதலாளித்துவ அரசியலில் கொள்கைகளை விட ஆளுமைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆளுமைகள் கொள்கையற்றவர்களாகவும் இதன் மூலம் நிறுவப்படுகின்றனர். எந்த ஒரு ஆளுமையும் அவர் சார்ந்த கொள்கைக்கு அப்பாற்பட்டு நிற்க முடியாது என்ற யதார்த்தத்தை தற்போதைய தமிழகம் வேண்டி நிற்கிறது. ஆளுமை என்று, கொள்கை வெளிப்பாட்டில், அதை அமலாக்கும் உறுதியிலும் வெளிப்படுகிறது என்பதை பொதுப்புத்தியில் உறைய வைக்க வேண்டியுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களாக தமிழக அரசியலில் இரண்டு ஆளுமைகள் செயல்படவில்லை, என்பதை வெற்றிடமாக முன்வைத்து, அரசியல் களம் விவாதிக்கிறது. ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மற்றொருவர் மூப்பு காரணமாக அன்றாட அரசியலில் செயல்பட இயலாத திமுக தலைவர் கருணாநிதி. இவர்கள் ஆளுமைகளாக மட்டுமே சித்தரிக்கப்படுவது சரியா? கொள்கையற்ற ஆளுமைகளாக இருந்தனரா? அப்படியானால், மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைகள் சார்ந்து அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வெற்று ஆரவாரமா? இதையெல்லாம் விவாதித்தாலும், கொள்கையற்ற ஆளுமை என்ற சொல்லாடல் எப்படி ஆதிக்கம் செலுத்த முடிகிறது?.

கட்சி அதிகாரமும் – ஆட்சி அதிகாரமும்: இந்திய ஆட்சி அதிகாரத்தை இந்துத்துவா என்ற கொள்கை கொண்ட பாஜக கைப்பற்றி, செயலாற்றி வரும் நிலையில், தமிழகத்தில் ‘கொள்கையைக் கைவிட்ட ஆளுமை’ குறித்த சர்ச்சைகள் சரிதானா என விவாதிக்க அதிமுக தலைமை விரும்பவில்லை அல்லது விரும்பும் ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை. அதன் விளைவே ஆளுமையில் வெற்றிடம் என புரிந்து கொள்ள முடியும். மற்றொருபுறம், பணம் கொண்டோரே ஆளுமை செலுத்த முடியும் என்ற கருத்தாக்கம் வலுவாக முன்வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவிற்குப் பின், சசிகலா என்ற தலைமை மாற்றத்தை, இன்று இணைந்துள்ள அதிமுகவின் இருதலைவர்களும் ஏற்றதன் விளைவே, கடந்த டிசம்பர் 31இல், சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியேற்பு.

சரியாக 35 நாட்களில் ஆட்சி அதிகாரமும், கட்சி அதிகாரமும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கம் முன்னெழுந்து, ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் பொறுப்பைக் கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டார். கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் ஒன்றாக இருப்பது, கட்சியின் கொள்கை அமலாக்கத்திற்கு உதவிடும் என தொண்டர்களுக்கு சொல்லப்பட்டது. அப்படியானால் அதிகாரத்தை நிலை நிறுத்த கொள்கை அல்லது பலம் என ஏதோவொன்று அவசியமாகிறது; அதை அமலாக்கவே தலைமை என்பது செயல்படுகிறது. இந்த நிலையில் எங்கிருந்து, ஆளுமைப் பற்றாக்குறை அல்லது வெற்றிடம் என்ற சொல்லாடல்கள் அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன?.

இப்போது மீண்டும் ஆட்சித் தலைமை ஒன்றாகவும், கட்சித் தலைமை வேறு ஒன்றாகவும் இருப்பது என்ற கருத்து, அதிமுக இணைப்பு பாலத்தில் ஒரு முக்கியத் தூணாக இருக்கிறது. இது ஆளுமை வெற்றிடத்தை நிரப்பிடுமா?. அரசியல் கொள்கையை விடவும், அதிகாரம் என்ற கொள்கையே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. அதுவே ஆளுமைக்கான அடையாளமாக கட்டமைக்கப்படுகிறது. மக்கள் இந்த ஆளுமைகளின் கருணைக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஜனநாயகத்தில் மக்களே உயர்ந்த ஆளுமை என்ற வளர்ச்சியை, புறந்தள்ளவே இது வழி வகுக்கும்.

இந்திய ஒன்றியத்திற்கான ஆளுமை? இந்திய அரசு ‘ஒன்றியம்’ என்ற பதத்தினால் அழைக்கப்படுகிறது. மாநிலங்களின் கூட்டமைப்பு, பல பண்புக் கூறுகளின் ஒன்றிணைவு என்பதை அழுத்தமாக முன்வைக்கிறது. இது ஒரு கொள்கை சார்ந்த பிரச்சனை ஆகும். இதை, கொள்கை ரீதியாக வளர்க்கப்பட்ட அல்லது வளர்கிற தலைவர்களால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அந்த வகையில் ஜெயலலிதா அல்லது கருணாநிதி போன்ற தலைவர்கள், மத்திய ஆட்சியாளர்களுடன் முரண்பட்டும், உடன்பட்டும் மாநிலத்தின் தொழில் உள்ளிட்ட வளர்ச்சிக்கான வாதத்தை முன்வைத்தனர். சில வெற்றிகளும் பெற்றனர். இது இந்திய ஆட்சியை பின்பற்றுகிற முதலாளித்துவ வளர்ச்சியுடன், முரண்படாத காரணத்தால், சாத்தியமானது.

இடதுசாரிகள் மட்டுமே மாநில உரிமைகளுக்கான சிறப்பு மாநாடுகளை, மாநில முதல்வர்களின் மாநாடுகளை நடத்தியுள்ளனர். அது மட்டுமல்ல, மாநில அரசுகளை மிரட்டும் பாஜக அரசின் செயல் இடதுசாரிகளின் செல்லுபடியாகவில்லை. காரணம், கொள்கை சார்ந்த போராட்டம். பாஜகவின் கொள்கையை பகிரங்கமாக எதிர்ப்பதுடன் மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கான மாற்றுக் கொள்கையை முன்வைத்து இடதுசாரிகள் செயல்படுகின்றனர். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தில் உறுதியாக இருப்பவர்களும் இடதுசாரிகள் மட்டுமே. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழகத்தில், ஆளுமை வெற்றிடம் என்பது, கொள்கையற்ற பின்னணியில் தான் உருவாகியுள்ளது. மத்திய ஆட்சியுடன் முரண்பட்டு மாநில உரிமையைப் பேசமுடியாத நிலை உருவாகியுள்ளது. உடன்பட்டே பேசியாக வேண்டும். இதற்கு கட்சி சார்ந்த குறைந்தபட்சக் கொள்கையும் கூட அவசியம் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றனர். எனவே தான் ஆளுமை வெற்றிடம் என்ற பதம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்கு மக்களும் அதிமுக தொண்டர்களும் பயன்படுத்தப்படுவது ஆச்சர்யமானது அல்ல.

ஜெயலலிதா மறைவின் போது, ஆட்சித் தலைமை ஓ.பி.எஸ் வசமும், கட்சித் தலைமை சசிகலா வசமும் என்ற முடிவு மத்திய ஆட்சியாளர்களின் பின்னணி இயக்கத்தில் இருந்தே எட்டப்பட்டது என்பதை எப்படி மறுக்க முடியாதோ, அதுபோலவே இன்றைய உடன்பாடும் காணப்பட்டுள்ளது என்பதையும் மறைக்க முடியாது. எனவே பிப்ரவரி 7 அன்று ஏற்பட்ட பிளவு போல் இப்போதும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, என்ற ஊகங்களை தவிர்க்க இயலாது. இந்த விவரங்களின் பின்னனியில் இருந்தே அதிமுக தொண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

மத்திய பாஜக ஆட்சி, முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் அளித்த வேண்டுகோளான, வர்தா புயல் நிவாரண நிதி குறித்த தொகையை பரிசீலிக்கவில்லை. அதேபோல் தற்போதைய முதல்வர் எடப்பாடி. பழனிசாமி அளித்த வறட்சி நிவாரண நிதி குறித்த வேண்டுகோளைத் துளியளவும் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் அதிமுகவின் இணைப்புப் பாலமாக மத்திய அரசு விளங்குகிறது. மத்திய அரசு தமிழக மக்களை விட, அதிமுகவின் ஒற்றுமை குறித்து அதிக கவலை கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மாநிலங்களில் தங்களின் கொள்கைகளை செயல்படுத்தும் அரசுகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் விருப்பத்தை, இச்செயல் வெளிப்படுத்துகிறது.

மக்கள் நலனுக்காக ஓ.பி.எஸ் அல்லது எடப்பாடி இருவருமே மத்திய அரசை அழுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மாநிலத்தின் இந்த நலனுக்காக மத்திய அரசின் இந்த கோட்பாட்டை அல்லது கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று கூறும் அளவிற்கு அதிமுகவின் இரு தலைவர்களும் செயல்படவில்லை. இப்போது ஒருவர் முதல்வர்; மற்றொருவர் துணை முதல்வர். ஆனாலும் தமிழக மக்களுக்கு எந்தப் புதிய நன்மையையும் உருவாக்கப் போவதில்லை. எம்.எல்.ஏ க்கள் எகிறிக் குதித்து ஓடத் தயாராகி வருகின்றனர். எனவே, இது அப்பட்டமான சந்தர்ப்ப வாத அரசியல். இதற்கு ஆளுமை, கொள்கை என்ற எந்தக் கோட்பாடும் தேவை இல்லை.

உரிமையைப் பறிக்கும் சலுகைகள்: அண்மை நாட்களில் உரிமைகளைப் பேசுவதை விடவும் சலுகைகள் தருவது குறித்து பேசுவது அதிகரித்துள்ளது. நவதாராளமயக் கொள்கையின் வெற்றியாகவும் இதைக் கொள்ள முடியும். அதிமுக உறுப்பினர்களின் உரிமையாகப் பேசப்பட்ட பொதுச் செயலாளர் தேர்வு, இனி தலைமை சலுகை அளிக்கிற ஒருவருக்கானதாக மாறும். ஏன் வெளியேறினோம்; ஏன் இணைகிறோம் என்பது கூட்டங்களில் கலந்து கொண்ட- ஏற்பாடுகள் செய்த அவர்கள் எப்போதும் கூறுகிற மேற்படி ஒன்றரைக் கோடி அடிமட்டத் தொண்டர்களுக்கான உரிமை சார்ந்ததாக இல்லை. வழங்கப்படும் சலுகைகளின் பகுதியாக இந்த நடவடிக்கைகளை அதிமுக கட்டமைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தில் பல ஆயிரம் பக்கங்களில் இரட்டை இலைச் சின்னத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் இனி என்னவாகும்? இந்த இணைப்பின் மூலம் இரட்டை இலைச் சின்னம் உறுதி செய்யப்படும் என ஊகிக்க முடிகிறது. ஆனால் நடந்து முடிந்த செயல்களின் ஒரு பகுதியாக, சசிகலா அல்லது அவர் குடும்பத்தினர், என்ன எதிர்வினை ஆற்றுவர்? அதில் நிறைந்திருக்கும் மர்மம் என்ன? ஏன் திடீரென சசிகலாவிற்கு, பெங்களூரு சிறை நிர்வாகம் காட்டிய சலுகைகள் தீவிரமாக வெளிப்பட்டது? சசிகலாவின் சிறைவாழ்க்கை ஏன் தற்போது செய்தியற்ற ஒன்றாக மாறியுள்ளது? சிறையில் அளிக்கப்படும் சலுகைகள் நின்று விட்டது எனக் கூற முடியுமா? தினகரன் பின்னால் அணிவகுப்போர், அவரின் செயல்பாடு ஆகியவை சசிகலாவிற்கு தெரியாமல் நடக்கக் கூடியதா? இவை சின்னச் சின்ன சலுகைகளுக்கு இரையாகும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு புரியப் போவதில்லை. வாழ்க இணைப்பு விழா, மோடி வாழ்க என்ற முழக்கங்கள் விண்ணைமுட்ட இந்த ஏற்பாடுகள் தேவையாக உள்ளது.

ஆனால் மக்களின் தேவை என்பது, ஊழல் இல்லாத, அனைத்துப் பகுதி மக்கள் நலன் காக்கப்படுகிற, மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படாத ஒரு அரசு. அதை, அதிமுகவின் இப்போதைய இணைப்பு மூலமான அதிகாரப் பகிர்வு தீர்க்கப் போவதில்லை.

Leave A Reply