ஆர்.கே.நகர் தொகுதியில் இளைஞர்-மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானங்களை அமைத்துத் தரவேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – இந்திய மாணவர்சங்கம் சார்பில் திங்களன்று (ஆக21) சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
ராதாகிருஷ்ணன் நகர்  சட்டமன்றத்தொகுதியில் பொருளாதாரத்திலும் வாழ்நிலையிலும் மிகவும் பின்தங்கிய மக்கள் கணிசமாக வாழ்ந்துவருகின்றனர். இப்பகுதியில் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள், மாணவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் இங்கு அரசுக்கோ, மாநகராட்சி நிர்வாகத்திற்கோ சொந்தமான விளையாட்டு மைதானங்கள் என்பது இல்லை.  இந்த ஆற்றல் மிக்க இளைஞர் பட்டாளங்கள் வெகுதொலைவில் உள்ள செங்குன்றம் , மாதவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தான் விளையாடவேண்டும்.  இத்தொகுதியில் எழில்நகர் அருகில் நூற்றுக்கணக்கான அரசு நிலங்கள் உள்ளன. இங்குள்ள பணக்காரநகர்  உள்ளிட்ட 300 ஏக்கர் நிலப்பரப்பை சில சமூகவிரோதிகள் ஆட்சியாளர்களின் துணையோடு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை  அரசு நிர்வாகம் மீட்டு இப்பகுதி மக்களின் அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு மைதானம், உடற்பயிற்சிக் கூடம்,  மூலிகைபூங்காக்கள் அமைக்கவேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மாணவர் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில்  திங்களன்று வ.உ.சிநகரில் வாலிபர், மாணவர், பெண்கள் பேரணியாக சென்று தண்டையார் பேட்டை மண்டலம் மாநகராட்சி உதவிஆணையரிடம் மனுகொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர் புதனன்று ஆய்வு செய்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தப் போராட்டத்தில் வாலிபர் சங்க வடசென்னை மாவட்டத் தலைவர் சரவணத்தமிழன், செயலாளர் கே.எஸ்.கார்த்திக், பொருளாளர் தீபா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விஜயகுமார், செயலாளர் இசக்கி, பகுதி நிர்வாகிகள் விஜி, சூரியா , வேலு , எஸ்.சுந்தரராஜன், ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன் (சிபிஎம்), மாதர்சங்க நிர்வாகிகள்  பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,  மாநகராட்சி அலுவலர்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் , தவறும் பட்சத்தில் இந்த கோரிக்கை நிறைவேறும் வரை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி நேரடியாக களத்தில் இறங்கிப் போராடும்  என்றார்.

Leave A Reply

%d bloggers like this: