தமிழக விவசாயிகள் நாட்டின் தலைநகரில் போராட்டம் நடத்தினால் கூட அவர்களை பார்த்துப் பேச சிறிது நேரம் ஒதுக்க முடியாத பிரதமர் மோடி திங்கள்கிழமை வேளாண்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை தாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக்கூட்டத்தில் மண்வளப் பரிசோதனை அட்டை, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் கடந்த ஆண்டில் 90 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 90 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காப்பீட்டுத் திட்ட இழப்பீடு வழங்குவதற்காக நடைபெறும் கணக்கெடுப்பு முறையில் உள்ள நிபந்தனைகள், எந்தவொரு விவசாயிக்கும் இழப்பீடு வழங்கிடக்கூடாது என்பது போலவே உள்ளன. விளைச்சல் தொடர்பான ரேண்டம் கணக்கெடுப்பு, நடுகை நிலையிலேயே பயிர் பாதிக்கப்பட்டதா? விளைச்சல் காலத்தில் பாதிக்கப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் நவீன தொழில்நுட்ப முறையில் ஆய்வு செய்வதாகக் கூறப்படுகிறது,ஆனால் அதன் பயன் என்னவோ விவசாயிகளுக்கு ஏறத்தாழ பூஜ்யம்தான். ஒரு பகுதியில் சிறு அளவு விளைச்சல் இருந்தாலும் இழப்பீடு வழங்குவது குதிரைக் கொம்பு போன்றதுதான். இந்தநிலையில் 90 லட்சம் விவசாயிகள் பெற்றபயன் எத்தகையது என்பதும் அந்த இழப்பீடுஉண்மையிலேயே விவசாயிகளின்கைகளுக்குப் போய்ச் சேர்ந்ததா? இல்லை கடன் கணக்கில் வரவு வைக்கப்பட்டதா? என்ப தெல்லாம் மத்திய ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம். அதுவும் சாதாரண ஏழை, எளியவிவசாயிகளுக்கு கிடைத்ததா? கார்ப்பரேட் விவசாயிகளுக்கு சமர்ப்பணம் ஆனதா? யாருக்குத் தெரியும்?

ஆனால் சாதனைப் பட்டியல் வாசிப்பதில் நமது பிரதமரும் சளைப்பதில்லை. அவரது அமைச்சர்களும் இளைப்பதில்லை. ஆனால் அதிகாரிகளும் கூட இப்போது அந்தப் பாதையில் வெகுதூரம் போய் விட்டார்கள். ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது தமிழ் முதுமொழி. அது இப்போதைய நடப்புக்கு நன்றாகவே பொருந்துகிறது. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்களது விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை- உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்று கூறிய தேர்தல் வாக்குறுதியை பிரதமர் மோடி செயல்படுத்தினாலே பாதிப் பிரச்சனை தீர்ந்துவிடும். தவிர வறட்சி, பெருமழை போன்ற இயற்கைச் சீற்றங்கள், பேரிடர்களால் நிகழும் பாதிப்புகளிலிருந்து விடுபட இழப்பீடுகள் வழங்குவது அரசாங்கத்தின் சாதாரண நடைமுறை.ஆனால் கார்ப்பரேட் கனவான்களுக்கு வாரிவழங்கும் மோடி அரசு விவசாயிகளுக்குத் தான் கிள்ளிப் போடக்கூட நினைப்பதில்லை.

ஆனால் விவசாயிகளுக்காக தனது அரசாங்கம், படாதபாடுபடுவதுபோல் தோற்றம்காண்பிக்க விளம்பரம் செய்வது குறையவில்லை. விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மோடி கட்டளையிட்டாராம். உலக நடிப்புத்தான் போங்கள் விளம்பர மோகி மன்னிக்கவும் நரேந்திரமோடி.

Leave A Reply