திருப்பூர், ஆக. 21 – திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கான கதை சொல்லல் மற்றும் வாசிப்பு முகாம் திங்களன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா முன்னிலை வகித்தார். மாநகராட்சி இரண்டாம் மண்டல உதவிப் பொறியாளர் சேகர் வாழ்த்தி பேசினார். எஸ்.டி எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் லீலாவதி குழந்தைகளுக்கான புத்தகங்களை அறிமுகம் செய்து பேசினார்.

இதைத்தொடர்ந்து கதை சொல்லல் நிகழ்வில் சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவம் “ராசுக்குட்டி, நீரில் விழுந்த நிலா” போன்ற குழந்தைகளுக்கான கதைகளை குழந்தைகளை ஈர்க்கும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் குழந்தைகளுக்கான கல்வி எனும் தலைப்பில் வாசிப்பின் அவசியம் குறித்து பேசியதுடன், குழந்தைகளின் மன உலகை சித்தரிக்கும் கதைகளை கூறினார். மேலும், குழந்தைகளுக்கான உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை தன்னார்வலர் பாண்டியராஜன் கூறினார். நிகழ்ச்சிகளை அருள்ராஜ் ஒருங்கிணைத்தார். முடிவில் ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.