தாராபுரம், ஆக. 21 –
தாராபுரம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சார் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தாராபுரம் அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேருராட்சிகுட்பட்ட ரெட்டாலவலசு ரோடு மாரியம்மன் நகரில் புதிய டாஸ்மாக் கடை திங்களன்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன்பின் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சுவாவிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது. ரெட்டாலவலசு மாரியம்மன் நகரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் வழிபடும் மாரியம்மன் கோவில் உள்ளது.

அதே ரோட்டில் பகவான் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயணம் செய்த வண்ணம் இருப்பார்கள். தனியார் நர்சரி பள்ளியும் அதே பகுதியில் செயல்படுகிறது. இக்கடை செயல்பட்டால் தாராபுரம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்துவர அச்சப்படுவார்கள். மேலும், இக்கடை அரசு விதிமுறைகளின்படி கோயில் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் வருவதால் சர்வேயரை வைத்து அளந்து பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்டணம் செலுத்தி காத்திருந்தோம். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் அவசரகதியாக கடையை அளவீடு செய்யாமலேயே கடையை திறந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இக்கடையை முட உத்தரவிடவேண்டும் என பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். சார் ஆட்சியர் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.