ஈரோடு, ஆக. 21- தோல் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மாசு கலந்து நீருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு இ.எம்.எஸ்.நகர், கொங்கம்பாளையம் பகுதியில் பல சாய பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது. இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருவதால், நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் குடிக்க நீரின்றி வருகிறார்கள்.

இந்நிலையில் சாயப்பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கங்காபுரத்தில் உள்ள ஓடைகளில் தினமும் திறந்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தோல் கழிவு நீரை சுத்திகரிக்காமல் ஆழ்துளை வழியாக விட்டுவிடுவதால் அருகில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. குடிக்க பிடிக்கும் இந்த ஆழ்துளை வழியாக இந்த கழிவுகள் கலந்து வருகிறது. மேலும் அதிக துர்நாற்றம் வீசுகிறது. இதனை உபயோகப்படுத்த இயலாத நிலைக்கு மோசமாகிவிட்டது.

மேலும், அதேபகுதியில் கணபதி புளிச்சிங் மற்றும் தனலட்சுமி பிளிச்சிங் பட்டறைகளில் இருந்து மிக அதிக அளவில் சாயகழிவுகள் ஓடையில் திறந்து விடப்படுகிறது. மேலும் இரவில் காற்றை மாசுபடுத்த கூடிய வாயுக்கள் திறந்து விடுகின்றனர். சாய நீர் கலந்த நீரை கால்நடைகள் பயன்படுத்தியதால் ஆடு, மாடுகள் இறந்துள்ளது. எனவே, இது போன்ற பட்டறைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாசு கலந்து நீருடன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.