வந்தே மாதரம் பாடலைப் பாடுவது இனிமேல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று 1998 நவம்பர் 17 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் அடிப்படைக்கல்வித்துறை அமைச்சர் ரவீந்திர சுக்லா அறிவித்தார். சிறுபான்மை சமூகத்தவரின் பள்ளிகளில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாது என்று அத்தோடு அறிவித்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 28(1) மற்றும் 3 ஆகியவற்றை மீறியதாக உள்ளது. மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவு (1)இல் அரசின் நிதி உதவியுடன் நடைபெறும் கல்வி நிறுவனங்களில் எந்தவொரு மதம் சார்ந்த போதனைகளும் இருக்கக் கூடாது என்றும், பிரிவு (3)இல் அரசு மற்றும் அரசு நிதி உதவியைப் பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் எவரொருவரும், அவர் வயதிற்கு வராதவராக இருந்தால் பாதுகாவலரின் அனுமதி இல்லாமல், அந்த நிறுவனங்களில் அளிக்கப்படும் மதம் சார்ந்த போதனைகளில் கலந்து கொள்வதோ அல்லது அந்த நிறுவனங்களில் அல்லது அந்த நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடத்தப்படும் வழிபாடுகளில் கலந்து கொள்வதோ கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பெண் கடவுள் சரஸ்வதியை வணங்கிப் பாடும் சரஸ்வதி வந்தனத்திற்கும், வந்தே மாதரத்திற்கு எதிராக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த விதிகளே பொருந்துபவையாக இருக்கும். தேசிய கீதத்தைப் பாடுவதைக் கட்டாயமாக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருக்கும் தீர்ப்பினை வந்தே மாதரம், சரஸ்வதி வந்தனம் ஆகியவற்றிற்கும் மிக அதிக அழுத்தத்தோடு அமல்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

நவம்பர் 17 அன்று அந்தச் சட்டம் இன்னும் அமலில் இருப்பதால், அது நடைமுறைப்படுத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அந்த அமைச்சர் கூறிய சில நாட்களிலேயே, நவம்பர் 21 அன்று மத்திய உள்துறை அமைச்சர் L.K.அத்வானி அந்தப் பாடல் பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதற்கு எதிராக தான் இருப்பதாகவும், ஆனாலும் உண்மையான நிலைமை குறித்து ஆராய வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில்  அந்த அமைச்சர் சுக்லா மந்திரிசபையிலிருந்து  நீக்கப்பட்டார். இருந்தாலும், பாஜகவை விட மிக வேகமாக, வந்தே மாதரத்தில் மதம் சார்ந்து எதுவும் இல்லை என்று சமதா கட்சி அறிவித்தது. உண்மையில் அது மிகப் பெரிய பொய் ஆகும். அது உண்மையென்றால், ”இந்தப் பாடலின் சில பகுதிகள் குறித்து நமது முஸ்லீம் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதில் இருக்கும் நியாயத்தை கமிட்டி உணர்ந்து கொள்கிறது. எனவே முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடிக் கொள்ளலாம்” என்று 1937இல் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூறியிருக்காது. இவ்வாறு அறுத்துக் கூறுபோடப்பட்ட ஒரு பாடல் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படுகின்ற பாடலாக எப்படி இருக்க முடியும்?

பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு 1882ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஆனந்தமடம் என்ற நாவலில் இந்த வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றிருக்கிறது. நிராத் C.சௌத்ரி என்பவரால் எழுதப்பட்ட சுயசரிதையான ‘அறியப்படாத இந்தியன்’ என்ற நூலில் அந்தப் பாடல் எழுதப்பட்ட சூழல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.”முஸ்லீம்களின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற புரட்சியை மிக உயரியதாகக் காட்டி, முஸ்லீம்களைத் தாழ்வுபடுத்தி மிக மோசமான வகையில் பங்கிம் சட்டர்ஜி, ரமேஷ் சந்திர தத் ஆகியோருக்கு இருந்த வரலாற்றுக் காதல் சித்தரித்தது. உண்மையில் மிக மோசமான முஸ்லீம் எதிர்ப்பாளராகவே சட்டர்ஜி இருந்தார். நாங்களெல்லாம் இவர்களின் வரலாற்றுக் காதலை வாசித்த ஆர்வமிகு வாசகர்களாக இருந்து, அவர்கள் கூறியவற்றை உள்வாங்கிக் கொண்டவர்களாக இருந்தோம்”  என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

R.C.மஜூம்தார் என்ற வரலாற்றாளரும் இது பற்றி எழுதியிருக்கிறார். ”நீண்ட வலிமையான சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற 1905 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் வந்தே மாதரம் என்பது இந்திய ’தேசபக்த குழந்தைகளின்’ புத்துணர்வுமிக்க குரலாக இருந்தது. பிரிட்டிஷ் போலீஸாரின் லத்தியால் ஆயிரக்கணக்கானவர்கள் தாக்கப்பட்டார்கள். பலர் வந்தே மாதரம் என்ற முழக்கத்துடன் தூக்குமேடை ஏறினார்கள். தாய்நாட்டைக் காப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தங்களது உயிரை நீத்த சந்தனாக்கள் அல்லது ’குழந்தைகள்’ என்றழைக்கப்பட்ட சன்னியாசிகளின் குழுவினைப் பற்றியதாக இந்தக் கதை நகர்கிறது. தங்களுடைய தாய்நாட்டை அவர்கள் காளி என்ற தெய்வமாகக் கண்டார்கள். ஆனந்த மடத்தின் இந்தப் பார்வையும், காளி பற்றிய சித்திரமும், பக்கிம் சந்திரரின் தேசியவாதம் என்பது இந்தியன் என்பதை விட ஹிந்து என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதையே காட்டுகிறது. அவருடைய பல படைப்புகளும் இந்தியாவை அடிமைப்படுத்திய முஸ்லீம்களின் மீதான தாக்குதல்களாகவே இருக்கின்றன. அவரது கட்டுரைகள் மற்றும் நாவல்களின் பல்லவியாக முஸ்லீம்களுக்கு எதிரான, சில சமயங்களில் பொருத்தமற்ற கருத்துக்களே பெரும்பாலும் இருந்தன. தேசபக்தியை மதத்திற்குள்ளும், மதத்தை தேசபக்திக்குள்ளும் பக்கிம் சந்திரர் மாற்றியமைத்தார்” என்று மஜூம்தார் அழுத்தமாகக் கூறியுள்ளார். அந்த நாவல் பிரிட்டிஷாருக்கு எதிரானதாக இருக்கவில்லை. அந்த நாவலின் இறுதிப் பகுதியில் தெய்வீகமான மனிதர் ஒருவர் சன்னியாசிகளின் தலைவரான சத்தியானந்தாவிடம் அந்த சண்டையை நிறுத்துமாறு வலியுறுத்துவதை நாம் காணலாம். அவர்களுக்கிடையில் நடைபெற்ற உரையாடல் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது.

அவர்: உனது வேலை முடிந்து விட்டது. முஸ்லீம்களின் அதிகாரம் அழிக்கப்பட்டு விட்டது. இனிமேல் நீ செய்ய வேண்டியது எதுவுமில்லை. தேவையற்ற கொலைகளின் மூலம் எந்தவொரு நல்ல செயலையும் சாதிக்க முடியாது.

சத்தியானந்தா: முஸ்லீம்களின் அதிகாரம் அழிக்கப்பட்டு விட்டது உண்மைதான். ஆனால் ஹிந்துக்களின் ராஜ்யம் நிறுவப்படவில்லை. கல்கத்தா இன்னும் பிரிட்டிஷாரின் பிடியிலேயே இருக்கிறது.

அவர்: ஹிந்துக்களின் ராஜ்யம் இப்போது ஏற்படாது. நீ உனது செயலைத் தொடர்ந்தால், எந்தவொரு காரணமுமின்றி பலரும் கொல்லப்படுவர். எனவே என்னோடு வா.

சத்தியானந்தா (மிகவும் வருத்தத்துடன்): கடவுளே! ஹிந்துக்களின் ராஜ்யம் ஏற்படாது என்றால், நம்மை ஆளப் போவது யார்? முஸ்லீம் மன்னர்கள் திரும்பவும் வந்து விடுவார்களா?

அவர்: இல்லை. ஆங்கிலேயர்கள் ஆள்வார்கள்.

சத்தியானந்தா தனது எதிர்ப்பைத் தெரிவித்த போது, வாளினைக் கீழே போடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறான்.

அவர்: உனது சபதம் நிறைவேறி விட்டது. உன்னுடைய அன்னைக்கு நீ நல்வாய்ப்பைத் தந்திருக்கிறாய். பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். எனவே இத்தோடு உனது சண்டையை நிறுத்திக் கொள். மக்கள் விவசாயத்தை தொடங்கட்டும். இந்தப் பூமி அறுவடையின் மூலம் வளமாகட்டும். கிடைக்கும் இந்த செல்வத்தின் மூலம் நமது மக்கள் செல்வந்தர்களாக ஆகட்டும்.

சத்தியானந்தா (கோபத்தில் அழுது கொண்டே): அவளுடைய எதிரிகளின் ரத்தத்தை அறுவடை செய்து எனது அன்னை பூமியை நான் வளமாக்குவேன்.

அவர்: யார் எதிரிகள்? இப்போது எதிரிகள் என்று யாருமில்லை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆளுபவர்கள் மட்டுமல்ல. அவர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்களை யாரும் போரில் தோற்கடிக்க முடியாது.

சத்தியானந்தா: அப்படியென்றால், நான் எனது அன்னையின் உருவத்திற்கு முன் நின்று என்னை நானே கொன்று கொள்வேன்.

அவர்: அது அறியாமையாகவே இருக்கும். வா என்னோடு. நன்றாகப் புரிந்து கொள். இமயமலையில் கோவில் ஒன்று இருக்கிறது. நான் அங்கே உனக்கு அவளின் உருவத்தை காட்டுவேன்.

இவ்வாறு சொல்லி விட்டு அவர் சத்தியானந்தாவின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.

அந்த படைப்பு முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான குறிப்புகளே பரவியிருக்கின்றன. கோவில் வாசலில், தனது கைகளில் வாளினை ஏந்திக் கொண்டு நின்று கொண்டிருந்த ஜீவானந்தா, “முஸ்லீம்களின் ஆட்சி என்ற பறவைக் கூட்டைக் கலைப்பதற்கும், இந்த துரோகிகளின் நகரை அழித்து அவர்களை ஆற்றுக்குள் மூழ்கடிக்கவும், அவர்களின் இந்தப் பன்றிக்கொட்டிலை எரித்து சாம்பலாக்கவும், நமது தாய் மண்ணை தீய சக்திகளிடமிருந்து விடுவிக்கவும் நாம் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நண்பர்களே! அதற்கான நாள் இதோ வந்து விட்டது” என்று காளியின் ‘குழந்தைகளுடன்’ பேசிக் கொண்டிருந்தான்.

அந்த நாவலில் வந்தே மாதரம் பாடல் பயன்படுத்தப்பட்டது தற்செயலானது அல்ல என்பதாலேயே, வகுப்புவாதக் கருத்துக் கொண்ட முஸ்லீம்கள் மட்டுமல்லாது அதனுடைய உள்ளடக்கம், அது பயன்படுத்தப்பட்ட சூழல் குறித்து பலரும் தங்களது எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றனர். அந்த நாவல் மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் அந்தப் பாடல் குறித்த M.R.A.பெயிக் தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. ”மொகலாய அரசு முடியும் தறுவாயில் இருந்த காலகட்டத்தில் நடப்பதாக எழுதப்பட்ட இந்தக் கதையின் கதாநாயகனான பவானந்தா வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய சண்டைக்குத் திட்டமிடுகிறான். அதற்கான ஆட்களைத் திரட்டும் போது சந்தித்த மகேந்திரா என்பவனிடம் பந்தே மாதரம் எனப்படும் தாயே வணக்கம் என்ற பாடலைப் பாடுகிறான். அந்தப் பாடலின் பொருள் பற்றி கேட்ட மகேந்திராவிடம் மிகுந்த உத்வேகத்துடன் பவானந்தா பதிலளிக்கிறான்.

”நமது மதம் காணாமல் போய் விட்டது. நமது சாதி காணாமல் போய் விட்டது. நமது மரியாதை காணாமல் போய் விட்டது. இந்தக் குடிகார நேராக்களை (முஸ்லீம்களைப் பற்றி இழிவாகச் சொல்லப்படும் சொல்) விரட்டியடிக்கா விட்டால், ஹிந்துக்களால் ஹிந்து கொள்கைகளைக் காப்பாற்ற முடியாது” என்கிறான். இந்தப் பதிலினால் திருப்தியடையாத மகேந்திரா அந்த புரட்சிப் படையில் சேரத் தயங்குகிறான். அதற்குப் பிறகு ஆனந்த மடத்தில் உள்ள கோவிலுக்கு அவன் அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கே இருந்த, நான்கு கைகளில் இரண்டு ரத்தம் சொட்டும் தலைகளைப் பிடித்துக் கொண்டிருந்த மிகப் பெரிய விஷ்ணு உருவம் அவனிடம் காட்டப்படுகிறது.  விஷ்ணுவின் மடியில் இருந்த உருவத்தைக் காண்பித்து ”யார் அவள் என்று உனக்குத் தெரியுமா?” என்று அங்கிருந்த பூசாரி அவனிடம் கேட்கிறான்.  ”அவள்தான் நமது அன்னை. ’பந்தே மாதரம்’ என்று முழக்கமிடும் நாம் எல்லோரும் அவளின் குழந்தைகள்” என்று சொல்லி விட்டு காளி, அதற்குப் பிறகு துர்க்கையின் உருவத்திற்கருகே அவனைக் கொண்டு சென்று, ஒவ்வொரு முறையும் ‘பந்தே மாதரம்’ என்று முழக்கமிடச் சொல்கிறான்.

அந்த நாவலின் மற்றொரு இடத்தில் “கொல்லுங்கள். இந்த நேராக்களைக் கொல்லுங்கள்” என்று சிலர் கத்தும் போது, மற்றவர்கள் “பந்தே மாதரம்” என்றும் “மசூதிகளை இடித்து அங்கே கோவில்களைக் கட்டுவதற்கான நேரம் வந்து விட்டது” என்றும் உரக்கச் சொல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நாவலில் வரும் அந்தப் பாடலில் உள்ள ஐந்து பத்திகளில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே ‘ஒத்துக் கொள்ளப்பட்டவைகளாக’ இருக்கின்றன. கடைசி இரண்டு பத்திகள் குறித்து ஜவஹர்லால் நேரு தனது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்.

ஒத்துக் கொள்ளப்பட்ட அந்த முதல் இரண்டு பத்திகள்

தாயே நான் உன்னை வணங்குகிறேன்!
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை 
எங்கள் தாய்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்!

என்பதாக இருந்தன:

மூன்றாவது பத்தியில் வரும் ’உன்னுடைய அச்சம் தருகிற பெயர்” என்பது காளியைக் குறிப்பதாகவே இருக்கிறது. நான்காவது பத்தியும் அதே தொனியிலேயே, “நீ துர்க்கை, பெண் அரசி; தாக்குகின்ற அவளின் கைகளில் மின்னும் வாள்”  என்றிருக்கிறது. நாட்டைத் தெய்வமாக உருவகித்து அவளுக்கு மதரீதியாக மரியாதை செலுத்துகின்ற வகையில் இந்தப் பாடல் இருப்பதாக மஜூம்தார் குறிப்பிடுகிறார். அனைத்து அதிகாரங்களையும், புகழையும் கொண்டிருக்கும் அன்னை காளியாக தாய்நாட்டை போற்றுவதாக இந்தப் பாடலின் உள்ளாக்கம் அதனை மேலும் மோசமானதாக்குகிறது. “வங்காள தேசம், ஏன் அனைத்து இந்தியாவும் ஹிந்து தெய்வம் என்ற பெண் வடிவத்தோடு அடையாளம் காணப்பட்டு, தெய்வீகத் திருநாடு என்பதாக உருவெடுத்து விட்ட நிலையில், இத்தகைய பாடல் எவ்வாறு மதச்சார்பற்றதாக இருக்க முடியும்?* என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

இந்தப் பாடலுக்கான எதிர்ப்பு என்பது மிகவும் ஆரம்ப காலகட்டத்திலேயே எழுந்திருந்தது. 1908 டிசம்பர் 30 அன்று அமிர்தசரஸில் கூடிய இரண்டாவது அனைத்திந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய சையத் அலி இமாம், ”நீங்கள் நினைப்பதை என்னால் கூற முடியாது. ஆனாலும் இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலம் மதச்சார்புடைய பந்தே மாதரம் என்னும் முழக்கத்தை தேசிய முழக்கமாக, ராக்கிபந்தன் நிகழ்வை தேசிய நிகழ்வாக முன்னிறுத்துவதைக் காணும் போது, ஏமாற்றமும், மனவருத்தமுமே அடைய முடிகிறது.  தேசியம் என்ற பெயரில் ஹிந்து தேசியத்தை முன்னிறுத்துவது இன்று இந்தியாவில் வழக்கமாகி விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. அக்பரும், ஔரங்கசீப்பும் செய்த பரிசோதனைகள் தோல்வி அடைந்து விட்டனவா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் அமைதியாகப் பரவி இருக்கும் ஆங்கிலக்கல்வியின் மூலமாக வேற்றுமைகள் மீண்டும் தோன்றியுள்ளனவா?  என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். வேறுபாடுகளின் அடிப்படையில், தங்களது கருத்து வேறுபாடுகளை முன்வைக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு சமூகங்களிலும் மாநாடுகள். கூட்டமைப்புகள், நிறுவனங்கள் என்று பல்வேறு அமைப்புகள் இருப்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் அனைத்து வகையினரும் தங்களது தேவைகளையும், தரப்பு நியாயங்களையும் உண்மையான தேசிய வாழ்வியலைக் கட்டமைக்க நினைப்பவர்களின் முன்வைக்க முடியும் . . .

அனைவரது  உணர்வுகளையும், தேவைகளையும் மதிப்பது மட்டுமே உண்மையான இந்திய தேசியத்திற்கு தேவையானதாக இருக்கும். ஹிந்துக்கள், முஸ்லீம்கள் என்ற இரு பெரு சமூகங்களின் இணக்கத்திற்கு அது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. தேச முன்னேற்றம் என்ற சக்கரத்தை இழுப்பதற்கு ஒன்றைப் போல் மற்றொன்றும் முக்கியமானதாக இருப்பதை யாரும் மறுக்கவியலாது. கல்கத்தாவிலும், பூனாவிலும் இருக்கும் இந்திய தேசியத்தைக் கட்டமைப்பவர்களை நான் கேட்கிறேன்.

அவர்கள் இந்திய முஸ்லீம்கள் பந்தே மாதரத்தையும் சிவாஜியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? பல விஷயங்களில் முகம்மதியர்கள் நீங்கள் விரும்பும் வகையில் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் தங்களுடைய புகழ்வாய்ந்த பாரம்பரியங்களைப் போற்றுவதில் பலவீனமானவர்களாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள். ஹிந்துக்கள், முகம்மதியர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோர் தங்களுடைய உணர்வுகளைத் தியாகம் செய்து கொள்ளத் தேவையில்லாத வகையில் அரசியல் முன்னேற்றத்திற்கான திட்டத்தை நாட்டின் முன்வைக்குமாறு காங்கிரஸ் தலைவர்களை நான் வேண்டிக் கொள்கிறேன்” என்று உரையாற்றினார்.

1937 அக்டோபர் 26 அன்று கல்கத்தாவில் நேரு தலைமையில் கூடிய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆனந்த மடம் புத்தகத்தைத் தவிர்த்து விட்டு, அந்தப் பாடல் மட்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் மிக நெடிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. “அந்தப் பாடலும், வார்த்தைகளும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக வங்கத்தில் நடைபெற்று வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராக நடைபெற்ற ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்ப்புகளுக்கான அடையாளமாக மாறின. பந்தே மாதரம் என்ற அந்த வார்த்தைகள் மக்களைக் கவர்ந்திழுக்கும் சக்தி நிறைந்ததாகவும், தேச சுதந்திரத்திற்கான போராட்டத்தை நமக்கு நினைவுபடுத்துகின்ற வாழ்த்தாகவும் மாறின. மற்ற மாநிலங்களுக்கு அந்த முதல் இரண்டு பத்திகளும் மெதுவாகப் பரவியதன் விளைவாக தேசிய அந்தஸ்தினைப் பெற்றன. மற்ற பத்திகள் எப்போதாவது பாடப்படுபவையாக மட்டுமே இருந்தன. இன்றளவில் மிகச் சிலரே அதனை அறிந்திருக்கின்றனர்.

அந்த எதிர்ப்புகளின் உள்ளார்ந்த நியாயத்தை ஒத்துக் கொள்ளும் அதே நேரத்தில், இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நாவல் எழுதப்பட்ட தேசிய இயக்கங்கள் எழுந்திராத காலகட்டத்தில் இருந்த சூழலை விட, தேசிய வாழ்வியலின் ஒரு பகுதியாக இந்தப்பாடல் பயன்படுத்தப்படும் தற்போதைய நிலைமை முக்கியத்துவம் பெறுவதாக கமிட்டி சுட்டிக் காட்ட விரும்புகிறது. இவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டு, தேசிய அளவிலான கூட்டங்களில் எங்கெங்கெல்லாம் பந்தே மாதரம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றும்,  பந்தே மாதரத்துடன் அல்லது பந்தே மாதரத்திற்குப் பதிலாக எதிர்ப்புகள் எதுவுமில்லாத மற்ற எந்தவொரு பாடலையும் பாடுவதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களுக்கு முழுமையான சுதந்திரம் இருக்கிறது என்றும் கமிட்டி பரிந்துரை செய்கிறது” என்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டு வருவதாக நினைவு கூர்ந்த அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

’தேசிய’ பாடல்கள் என்பவை அரசியல் ரீதியாக அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாகாதவையாக இருக்க வேண்டும். அவ்வாறான பிரச்சனைக்குரிய பாடல்கள் தேசிய அளவிலான ஒப்புதல்களைப் பெறுவதில்லை என்று சொல்லப்பட்ட கருத்துகளுக்கு மாறாக, எவ்வளவு மோசமான பாடலாக இருந்தாலும் வரலாற்றுரீதியாக இந்தப் பாடல் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடையதாகவே இருக்கிறது என்று வாதிடப்பட்டது. வரலாற்றுரீதியிலான இந்தத் தொடர்பை ஒத்துக் கொள்ளுமாறு காந்தி முஸ்லீம்களைக் கேட்டுக் கொண்ட போதிலும், பாடலைக் கட்டாயமாகத் திணிப்பது என்பதற்கு எதிராகவே அவர் இருந்தார்.  1947 ஆகஸ்ட் 23 அன்று அலிப்பூரில், ‘சந்தேகமே இல்லை. எந்தவொரு செயலும் இரு பக்கங்களிலுமிருந்து முழுவதும் தன்னிச்சையாக நடைபெறுவதாக இருக்க வேண்டும்’ என்று காந்தி கூறினார்.

இந்திய அரசாங்கமும் உணர்வுப் பூர்வமான இந்த சர்ச்சையை எதிர்கொண்டது. அரசினுடைய நிலையை 1948 ஆகஸ்ட் 25 அன்று அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் ஓர் அறிக்கையாக பிரதமர் நேரு அறிவித்தார்.  ”1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகு ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பேண்டுகளில் வாசிப்பதற்கான தேசிய கீதம் ஒன்று நமக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. தேசியக் கொடியினைப் போன்றே இதுவும் முக்கியமானதாக இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில்,  சற்றே மாற்றியமைக்கப்பட்ட சுதியுடன், இந்திய தேசிய ராணுவத்தால் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்த ஜன கன மன பாடல், தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்து இருக்கிறது. தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் ஜன கன மன அல்லது வேறொரு பாடலைப் பரிந்துரை செய்யுமாறு அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் நான் எழுதியிருந்தேன். அதற்கு பதிலளிப்பதற்கு முன்னராக தங்களுடைய மாநில முதல்வர்களையும் கலந்தாலோசிக்குமாறு அதில் கூறியிருந்தேன். மத்திய மாநிலத்தின் ஆளுநரைத் தவிர மற்ற அனைத்து ஆளுநர்களும் ஜன கன மன பாடலுக்கு தங்களது ஒப்புதலை அளித்துள்ளனர்.  எனவே தேசிய கீதம் குறித்து அரசியல் நிர்ணய சபை இறுதி முடிவு செய்யும் வரையில் தற்காலிகமாக ஜன கன மன பாடலை தேசிய கீதமாகப் பயன்படுத்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பாக எல்லா மாநில அரசாங்கங்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வந்தே மாதரம் மற்றும் ஜன கன மன ஆகிய இரு பாடல்களுக்கும் இடையில் சர்ச்சை எழுந்துள்ளது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட வந்தே மாதரம் பாடல் யாராலும் மறுக்கவியலாத   இந்தியாவின் தேசியப் பாடலாக, நமது சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. வேறு எந்தப் பாடல் மூலமாகவும் அதனை ஒதுக்கித் தள்ளி விடாமல், இந்த நிலையை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின்  சாரத்தையும், நிலைப்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கும் அந்தப் பாடல், போராட்டத்தின் உச்சகட்டத்தைப் பற்றியதாக இருக்கவில்லை. தேசியகீதத்தின் சுதியைப் பொறுத்த வரையில், வார்த்தைகளை விட சுதியே முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே வந்தே மாதரம் பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக தொடர்ந்து இருக்கலாம் என்பதோடு, தற்போதைய சூழல்களுக்கேற்றவாறு ஜன கன மன பாடலில் உள்ள சில வார்த்தைகளை மாற்றியமைத்த பிறகு, தேசிய கீதமாக ஜன கன மன பாடல் இருக்கலாம்.  இதைப் பற்றி அரசியல் நிர்ணய சபை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுத்து அறிவிப்பதுதான் இறுதியானது. முற்றிலும் ஒரு புதிய பாடலைக்கூட, அவ்வாறு எதுவும் இருக்குமாயின், தேர்ந்தெடுத்து அது அறிவிக்கலாம்” என்று நேருவின் அறிக்கையில் இருந்தது.

1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் மிகவும் தெளிவான அறிக்கை ஒன்றினை சபையில் வாசித்தார். “தேசிய கீதம் பற்றிய அறிவிப்பு குறித்த விவாதம் இன்னும் நிலுவையில் இருக்கிறது. தேசிய கீதம் குறித்து இந்த சபையின் முன்பாக வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அதன் பிறகு ஒரு தீர்மானத்தின் மூலமாக அது குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றே சிறிது காலத்திற்கு முன்பாக யோசிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு தீர்மானத்தின் மூலமாக சம்பிரதாயமான முடிவினை எடுக்காமல், தேசியகீதம் பற்றிய முடிவினை நான் அறிவிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் நான் இதனை அறிவிக்கிறேன்.

வார்த்தைகள் மற்றும் இசையின் மூலம் ஜன கன மன என்றழைக்கப்படும் பாடல், தேவைப்படும் போது வார்த்தைகளில் அரசாங்கம் அங்கீகரிக்கும் மாற்றங்களுடன், இந்திய தேசியகீதமாக இருக்கும்.  இந்திய சுதந்திரப் போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை ஆற்றிய வந்தே மாதரம் பாடல், ஜன கன மன பாடலுக்கு இணையாக மதிக்கப்படும். அதற்கிணையான நிலையில் வைக்கப்படும். (கை தட்டல்) இது உறுப்பினர்களைத் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன்.  

பாடலுக்கு உரிய மரியாதை ஆனால் அதனைக் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது என்கிற காந்திய சூத்திரத்திற்குள்ளே கொண்டு போய் சேர்ப்பதாகவே பரஸ்பர புரிந்துணர்வு இருந்தது. இந்த சிக்கல்களைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொண்டால். முஸ்லீம்களும், காங்கிரஸும் எவ்வாறு ஒருவருக்கொருவர் விலகிச் சென்று விட்டனர் என்பதற்கான காரணங்கள் தெரிய வரும். இந்தக் காரணங்கள் மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்குவதில் நமக்கான படிப்பினைகளைத் தருவதாக இருக்கும். பாடலைத் திணிப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் மதச்சார்பற்ற தேசியக் கொள்கைகளை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட முடிவுகளாகவே தெரிகின்றன.

http://www.frontline.in/static/html/fl1601/16010940.htm

ஃப்ரண்ட்லைன் 1999 ஜனவரி (02-15)

முனைவர் தா.சந்திரகுரு -விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.