சேட்டன் பகத் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இன்றைய இந்திய இளம் தலைமுறையினரிடையே மிகப் பிரலபமான எழுத்தாளர். ABP டிவி சேனலில் அரசியலை அடிப்படையாகக் கொண்ட் ரியாலிட்டி ஷோ 2014ம் ஆண்டு நடத்த ஆரம்பித்தார். மோடி குறித்த பல தகவல்களோடு அரசியல் வாழ்க்கை அந்த ஷோக்களில் அலசப்பட்டது. சேட்டன் பகத் மிக வெளிப்படையாக மோடியை ஆதரித்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அவைகளில் ஒருமுறை மோடியின் பள்ளி நண்பர் சுதிர் மிஸ்ரா மிகச் சாதாரணமாகத்தான் அந்த தகவலைச் சொல்லி இருந்தார். மோடியின் 14வது வயதில் பள்ளியில் நடந்த தேர்தலில் கலந்துகோண்டு மானிட்டராக வேண்டும் என மோடி ஆசைப்பட்டாராம். பள்ளியில் பலரும், அவருக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை என எடுத்துரைத்தார்களாம். நண்பர்களே அவரை ஆதரிக்கவில்லையாம். ஆனாலும் மோடி தனது உறுதியோடு தேர்தலில் நின்றாராம். வெற்றி பெற்றாராம். இதையெல்லாம் சொல்லி, மோடி மிகுந்த மன உறுதி கொண்டவர் என்றும், தான் எடுத்த முடிவில் பின் வாங்க மாட்டார் என்றும் தெரிவித்தார். நிற்க.

2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம் அன்று, ‘நாட்டின் பிரதமர் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறார்’ என பெரும் கொண்டாட்டமாய் நிகழ்ச்சி செய்யப்பட்டது. ஊடகங்கள் கருமமே கண்ணாய் அது குறித்து செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு பரபரப்பையும், ஆர்வத்தையும் தூண்டின. தூர்தர்ஷனில் நேரடி ஓளிபரப்பு இருப்பது குறித்து பள்ளிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, குழந்தைகளை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டன. மத்திய அரசின் மனித வளத்துறை முற்றிலும் களம் இறங்கி இருந்தது.

டெல்லியில் மானெக்ஷா ஆடிட்டோரியத்தில், ஆயிரக்கணக்கில் திரட்டப்பட்ட பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல் காலை 10 மணிமுதல் 11.15 வரை நடைபெற்றது. இதனை இந்தியாவின் பெரு நகரங்களில் குறிப்பிட்ட மையங்களில் பெரிய திரைகளின் முன்பு குழந்தைகள் திரட்டப்பட்டு கவனிக்கவும், அவர்களும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..

நாடாளுமன்றத்திலோ, வெளியே நிருபர்களிடமோ எந்தக் கேள்விகளை எதிர்கொள்ளவோ அதற்கு பதிலளிக்கவோ விரும்பாத பிரதமர் குறைந்தபட்சம் குழந்தைகளின் கேள்விகளுக்கு அன்று பதில் அளித்தார்.

*********

“அரசியல் மிக கஷ்டமானதா? நீங்கள் எப்படி மன அழுத்தத்தை சமாளிக்கிறீர்கள்?”

“அரசியல் ஒரு தொழில் அல்ல. சேவை என்று எடுத்துக் கொண்டால் அழுத்தமே வராது. தேசத்தின் மக்கள் அனைவரும் என் குடும்பம். அவர்களின் சந்தோஷம் என் சந்தோஷம். அவர்களின் வேதனை என் வேதனை.”

*********
”ஒரு புத்திசாலி மாணவன். ஒரு சோம்பேறி மாணவன். ஒரு சராசரி மாணவன். ஒரு டீச்சராக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

“எல்லா மாணவர்களும் டீச்சருக்கு சொந்தம். ஒவொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. நான் ஒரு ஆசிரியராக இருந்தால் பாகுபாடு காட்ட மாட்டேன்”

*********
என வரிசை விட்டுக்கொண்டு இருந்தார் மோடி. அப்போது அந்த கேள்வி ஒரு மாணவனிடம் இருந்து வந்தது.

“சிறு வயதில் எப்போதாவது நீங்கள் பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என நினைத்ததுண்டா?”

மோடி ‘ஹா ஹாவென சிரித்துக்கொண்டே, ““நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் மானிட்டராகும் போட்டியில் கூட கலந்து கொண்டதே இல்லை” என மேலும் சிரித்தார்.

இப்போது மோடியின் நண்பர் சொன்னதுக்கும், மோடி சொன்னதுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிய முடியும். மோடி சொன்னது பச்சைப் பொய் என்பதையும் அறிய முடியும்.

இந்த பொய் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும். ஒரு சாதாரண விஷயத்தை ஏன் கிளறுகிறீர்கள். மோடியின் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள், திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள் அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள்.

மோடி ஒரு தேசத்தின் பிரதமர் என்பதையும், அவரது ஒவ்வொரு சொல்லிலும், வெளிப்படைத் தன்மையும், உண்மையும் இருக்க வேண்டும் என்பதையும் இந்த தேசமும், அதன் பிரஜைகளும் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?

ஒரு மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின் மிக முக்கிய காரியங்களில் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என ஆராய்ந்து மோடி மீது சந்தேகம் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

எல்லோரும் பார்க்கும் தேசத்தின் பிரம்மாண்ட மேடையில் இருந்து கொண்டு, அவரை உண்மையாகப் பார்க்கும் இளைய தலைமுறையிடம் அப்பட்டமாகப் பொய் சொல்கிறவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டு இருப்பார் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

”தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை அவன் கைகளால் நசுக்கிக் கொன்றான். அதை அவன் பின்னால் ஒரு குழந்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தது.’ எனும் வார்த்தைகளோடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்த ஜென் கதை நினைவுக்கு வருகிறது.

அந்தக் குழந்தையின் மனநிலையில் ஒரு தேசமே இருப்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது.

Mathava Raj

Leave a Reply

You must be logged in to post a comment.