திருப்பூர், ஆக. 3 –
சின்னாண்டிபாளையம் ஓடையின் குறுக்காக தடுப்பணை கட்டி விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் சார் ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பிஏபி மங்கலம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் அருகே இடுவாய் சின்னாண்டிபாளையம் வழியாக மழை காலங்களில் வரும் தண்ணீர் ஆண்டிபாளையம் இடுவாய் ஓடையின் வழியாக வந்து நொய்யலில் கலக்கிறது. சின்னாண்டிபாளையம் பகுதியில் ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால் இப்பகுதி விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இது தொடர்பாக இரண்டு ஆண்டுகளாக வேளாண்மை பொறியியல்துறைக்கு மனு அளித்தோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் ஆண்டிபாளையம் வாய்க்காலில் கலக்கும் சாக்கடை கழிவுநீரை தடுக்கவேண்டும். மங்கலம் ஊராட்சி நிர்வாகம் முறையாக வடிகால் அமைத்து வாய்க்காலில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டு சின்னாண்டிபாளையம் -ராஜகணபதி நகர் வரை 1 கி.மீ மண்பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என தெரிவித்தனர். விவசாயிகள் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பூர் மாநகராட்சி 58-வது வார்டு வஞ்சிபாளையம் செல்லும் சாலை பகுதியில் குடியிருப்பு வீடுகள் அதிகம் உள்ளன. ஆனால் அங்கு குப்பை தொட்டிகள் இல்லாததால் குப்பைகளை தோட்டத்தில் இரவுநேரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். ஆகவே குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வஞ்சிபாளையம் பிரிவு திரும்பும்போது சாலை பள்ளமாக உள்ளது.

மேலும், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், பல்லடம், அவிநாசி, உடுமலை, காங்கயம் போன்ற பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இப்பகுதி விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டுமானால் தனியாரிடம், அதிக செலவு செய்து ஆழ்குழாய் அமைக்க வேண்டியுள்ளது. இதனால் அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக சுமார் 1200 அடி ஆழம் போடும் புதிய ரிக் இயந்திரம் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க உதவி செய்துதரவேண்டும். திருப்பூர் தெற்கு வட்டத்திலிருந்து ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய 3 கிராமங்களையும் வடக்கு வட்டத்தில் சேர்க்க வேண்டும். செங்கப்பள்ளியில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வட்ட கருவூல வங்கி கணக்கு ஊத்துக்குளி நகரத்திலேயே தொடங்கிட வேண்டும், திருப்பூர் பகுதியில் அளவுக்கதிகமாக பயன்படுத்தப்படும் பாலித்தின் பைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஊத்துக்குளி வாரிக்குளம் என்றழைக்கப்படும் குட்டையை தூர்வாரி முழு கொள்ளளவு மழைநீர் தேக்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.