கோவை, ஆக. 3-
மோசடி வழக்கு தொடர்பாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சுகேஷ்பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். கர்நாடக மாநிலம், பெங்களூர், பவானி நகரை சேர்ந்தவர் சுகேஷ்பாலாஜி (27). அதிமுக., அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தில்லி காவல் துறையினர் இவரை கைது செய்தனர். இதேபோல், சுகேஷ் பாலாஜி மீது பல்வேறு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளன.

இதில், கடந்த 2010ம் ஆண்டு கர்நாடக மாநிலம், பெல்லாரி மாநகராட்சியில் சமையலறை உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரை வாங்கி தருவதாக கூறி கோவை கணபதி சிவசக்தி காலனியில் குளோபல் கிச்சன் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜவேலுவிடம் ரூ.2.43 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக சுகேஷ் பாலாஜி மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் மீது கோவை மாநகர போலீசில் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது, இந்த நிதிமோசடி வழக்கின் விசாரணை கோவை ஜேஎம்.2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை வியாழனன்று நடந்தது. இதையடுத்து சுகேஷ் பாலாஜியை தில்லியில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். பின்பு நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் சுகேஷ்பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாட்சி விசாரணை நடப்பதாக இருந்தது. ஆனால்,அவரது தந்தை சந்திரசேகர் ஆஜராகாத காரணத்தால், சாட்சி விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து, சுகேஷ் பாலாஜியை காவல் துறையினர் ரயில் மூலம் மீண்டும் தில்லிக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.