மதுரை;
கீழடி அகழாய்வுப் பணியில் ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணனின் இடமாற்றத்தை கைவிடுமாறு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அளித்திருந்த மேல்முறையீட்டுப் பரிந்துரையை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) மீண்டும் ஏற்க மறுத்துள்ளது.

கீழடி அகழாய்வுப் பிரிவின் தொல்லியல் கண்காணிப்பாளராக மத்திய தொல்லியல் துறை சார்பாகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த மார்ச் 24-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.

இந்தப் பணியிட மாறுதலை எதிர்த்து அமர்நாத் ராமகிருஷ்ணன், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ததை அடுத்து, அமர்நாத்தை கீழடியிலேயே பணிமர்த்த வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு மார்ச் 30-ஆம் தேதி தீர்ப்பாயம் பரிந்துரை வழங்கியது.
ஆனால், இந்த பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஏப்ரல் 21-ஆம் தேதி நிர்வாகத் தீர்ப்பாயத்திற்கு தொல்லியல் துறை கடிதம் அனுப்பியது.

கடந்த மே 9-ஆம் தேதி அமர்நாத் ராமகிருஷ்ணன், தனது இடமாற்றத்திற்கு எதிராக இரண்டாவது முறையாக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தை முறையிட்டார்.
அமர்நாத் அந்த மேல்முறையீட்டில், “கீழடி அகழாய்வுப் பணி தொடர்ச்சியாக ஒரே அலுவலரால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமன்றி முதல் இரண்டு கட்ட அகழாய்வுப் பணி குறித்த எழுத்துப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆகையால் அதனை நிறைவு செய்ய வேண்டும். இதன்பொருட்டு மறுபடியும் தன்னை கீழடியிலேயே பணியைத் தொடர உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

அமர்நாத்தின் இந்த கோரிக்கையை மத்திய தொல்லியல் துறை ஏற்க வேண்டும் என்று நிர்வாகத் தீர்ப்பாயம் மீண்டும் மேல்முறையீட்டுப் பரிந்துரையை அளித்தது. ஆனால், இதையும் ஏற்க மறுத்துவிட்ட தொல்லியல் துறை, இதுதொடர்பாக ஜூலை 27-ஆம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன், தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளதால், மீண்டும் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
“எனது கோரிக்கை மிக நியாயமானது; ஆகையால் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தேன்; அங்கும் நியாயத்தின் பக்கம் தீர்ப்பானது; ஆனால், தொல்லியல் துறை இதனை ஏற்க மறுத்தது; மேல் முறையீட்டிலும் எனது கோரிக்கையே வென்றது; இப்போதும் தொல்லியல் துறை மறுப்புத் தெரிவித்துள்ளது; நிச்சயமாக மீண்டும் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்வேன்; தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.