கோவை, ஆக. 3-
தெருவில் கிடந்த அறுபது சவரன் தங்க நகையை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ தொழிலாளி முனியப்பனுக்கு கோவையில் சிஐடியு ஆட்டோ சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கோவை பூமார்க்கெட் அருகில் உள்ள ஆட்டோ சங்கத்தின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.செல்வம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாரன், ஆட்டோ தொழிலாளி முனியப்பனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் எம்.முத்துக்குமார், செல்வம், அமல்ராஜ், மாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் பேசுகையில், உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்பது ஆட்டோவில் கட்டியுள்ள ரேடியோ பெட்டியில் இருந்து வருகிற இசை மட்டுமல்ல. அது வாழ்வியல் சிந்தனை என்பது தொழிலாளி வர்க்கம் அறிந்தது. வாடகையை எதிர்பார்த்து வெறும் வண்டியில் அமர்ந்து வெறுங்கையோடு திரும்பிப்போகிற வறுமை இருந்தாலும், அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படாதவர்கள் தொழிலாளர்கள். மனித நேயம் மறந்துபோனது என சொல்கிறவர்களுக்கு இல்லை, அது இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதை மற்றவர்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறார் தோழர் முனியப்பன்.

மீட்டர் கட்டணத்தை ஜந்து ரூபாய் உயர்த்திக் கொடுங்கள் என்று வீதியில் இறங்கி உரிமைக்காக போராடுவோம். இதனை லத்தியால் காவல்துறை தடுக்கும் அடிக்கும், ஆனாலும், அவர்களே எங்களை தோழர் என்று அழைப்பதற்கான சந்தர்ப்பங்களை இதுபோன்ற நிகழ்வுகள் எங்களுக்கு மட்டும்தான் வாய்க்கும். ஏனென்றால் இது தொழிலாளி வர்க்கத்தின் இயல்பு. இவ்வாறு அவர்கள் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.