பொதுத்துறை எண்ணை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கழக நிறுவனம் (பிபிசிஎல்) எரிவாயு வணிகத்தில் இறங்கவுள்ளது. ஐந்தாண்டு திட்டத்தின் ஒருபகுதியாக தனது வளத்தை பல்வேறு துறைகளில் பிரித்து செலவிட முடிவு செய்துள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்நிறுவனம் சந்தையிடல், எண்ணை சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக  ரூ.1 லட்சம் கோடியை தனது விரிவாக்கத்திட்டங்களுக்கு செலவிட இலக்கு நிர்ணயித்துள்ளது.  சந்தையில் பிபிசிஎல் சொத்து மதிப்பை ரூ.2.50 லட்சம் கோடியாக உயர்த்த விரும்புகிறோம் என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதற்போதுள்ளதைவிட இரண்டரை மடங்கு  அதிகமாகும். எரிவாயுத்துறையில் காலடி எடுத்துவைக்க உள்ளோம். இது எங்களது வர்த்தகத்தின் அடுத்த மதிப்புவாய்ந்த நடவடிக்கையாகும். சோதனை முயற்சியாக அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்துள்ளோம்.

இரண்டு கப்பல்களில் வந்துள்ள அவற்றில் ஒரு கப்பலில் வந்துள்ள எண்ணை அதிக கந்தக தன்மை கொண்டதாகும். மற்றொரு கப்பலில் வந்துள்ளவை  குறைந்த கந்தக தண்மை கொண்டதாகும். ஒவ்வொறு கப்பலும் பத்துலட்சம் பீப்பாய்களை கொண்டதாகும். இந்த எண்ணையை எங்களது சுத்திகரிப்பு ஆலையில் சுத்தம் செய்து பல்வேறு எரிபொருட்களை பிரித்தெடுக்க உள்ளோம்.

எங்களது வளத்தை பல்வேறு வகையில் பிரித்து திறமையாக கையாள முடிவு செய்துள்ளோம்.அதன் ஒருபகுதியே இந்த ஏற்பாடு. பிபிசிஎல் வருவாய் ரூ.2.42 லட்சம் கோடியாகும். வரிக்கு பிந்தைய லாபம் ரூ.8339  கோடியாகும்.சந்தை பங்களிப்பு 24 விழுக்காடு ஆகும். தற்போதுள்ள சந்தை மதிப்பு ரூ.1லட்சம் கோடியாகும். தற்போது நாடு முழுவதும்  14 ஆயிரம்  சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் 4524 உள்ளன. தேவைக்கு ஏற்ப இந்த நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

20ஆண்டுகளுக்குப் பிறகு டீலர்களின் கமிஷன் தொகை ஆக.1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பிரதம மந்திரி சுரக்ஷா காப்பீட்டு திட்டமும் அமல்படுத்தப்படுகிறது என்றார் ராஜ்குமார்.

Leave a Reply

You must be logged in to post a comment.