கோவை, ஆக. 3-
சோலார் பேனல் வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு தண்டனை கிடைக்கும் நடிகை சரிதா நாயர் தெரிவித்தார். கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ஐசிஎம்எஸ் என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். இதில் காற்றாலை அமைத்து தருவதாக கூறி, கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜன் ரூ.28 லட்சம், உதகையை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ என்பவரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை வியாழனன்று நடந்தது. அப்போது, சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆஜராகினர். ஆனால், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணைக்கு பின்பு வழக்கினை வரும் செப்.8ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

இதன்பன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள வழக்கு தொடர்பாக எந்தவித மிரட்டலும் இல்லை. ஆனால், கேரளாவில் உள்ள சோலார் பேனல் வழக்கில் எப்போதும் போல மிரட்டல்கள் உள்ளது. சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழுவிடம் முன்பு எனது குற்றச்சாட்டுகளை தெரிவித்து விட்டேன். முறையாக விசாரனை நடைபெற்றால் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு தண்டனை கிடைக்கும். தற்போது விசாரணை குழு தயாரித்துள்ள அறிக்கை, கேரள அரசிடம் இரு மாதங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு கேரள அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

மேலும், கேரளாவில் நடிகை பாலியல் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதில் எனக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்றும் சரிதா நாயர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.