தொழிற்துறையில் வளர்ச்சி பெற்ற கோவை மாவட்டம் திரும்பிய பக்கமெல்லாம் தனியார் கல்லூரிகள் ஆக்கிரமித்து இருந்தாலும், அரசு கலைக்கல்லூரி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஆகவே, பொள்ளாச்சியில் புதிய அரசுக் கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆனைமலை துவங்கி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது.

இந்நிலையில், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் பகுதியில் அரசுக்கல்லூரி அமைக்க ஆணையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் நன்றி. இப்படி பத்திரிகையில் பக்கம் பக்கமாய்விளம்பரங்களும், திரும்பிய திசையெல்லாம் ஆளுயர கட்டவுட்டுகளும் அதிமுகவினர் கட்டியுள்ளனர். இந்த அறிவிப்பால் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றிலுள்ள மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், தற்போது அரசின் அறிவிப்பு அரசு கலைக் கல்லூரியல்ல என்பதும், பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஒரு உறுப்புக் கல்லூரி தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி கல்லூரிக்கான கட்டிடங்களே கட்டப்படவில்லை என்கிற நிலையில் மாணவர் சேர்க்கையில் அதிமுகவினர் ஈடுபட்டு வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தால் தொண்டாமுத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஓரத்தில் ஒரு வகுப்பறையும், பொள்ளாச்சியில் சமத்தூர் ராமஐயங்கார் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையிலும் இந்த உறுப்புக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழக்கிழமை முதல் (ஆக.3) கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்துவங்கிய நிலையில் திடீரென அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதேநேரம், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் தற்போது மாணவர் சேர்க்கைக்கான பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்காக உள்ளூரில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களின் வாயிலாக அதிமுகவினர், இலவசமாய்மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க எங்களை அணுகவும் என குறுஞ்செய்தி மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர். இதில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணும், வார்டு விபரங்களும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டு வருகின்றன. இதை நம்பி ஏராளமானோர் அந்த எண்களில் தொடர்பு கொண்டு கல்லூரிகளில் இடம் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் கூறுகையில், தமிழக அரசும், பாரதியார் பல்கலைக் கழகமும் உறுப்புக்கல்லூரியைத் தான் அறிவித்துள்ளது. அரசு கலைக்கல்லூரி என அறிவிக்கவில்லை. ஆனால், அதிமுகவின் சார்பில் தினசரி நாளிதழ் விளம்பரங்களிலும், நகரங்களில் கட் அவுட்டுகளிலும். சமூக வலைத்தளங்களிலும் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படுவதாக போலியான, குழப்பமான செய்திகள் பரப்பப்படுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால் அமைச்சரின் ஆசியுடன் உருவாக்கப்படும் குழப்பங்கள் குறித்து எப்படி அறிக்கை வெளியிடுவார்கள் என குற்றம்சாட்டினார். அதேபோல், இலவசமாக இடம் பெற்றுத் தருவதாகக் கூறுவதையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்கக்கூடாது. மக்களை ஏமாற்ற வாய்ப்புள்ளதால் யார் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியிடம் கேட்கையில், பொள்ளாச்சியில் பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், பி.காம் சிஏ, பி.காம் பிஏ, பி.பி.ஏ ஆகிய 5 பாடப்பிரிவுகளும், தொண்டாமுத்தூரில் பி.ஏ ஆங்கிலம், பி.ஏபொருளாதாரம், பி.எஸ்.சி கணிதம், பி.காம் சிஏ, பி.காம் பிஏ, பி.பி.ஏ ஆகிய ஆறு பாடப்பிரிவுகளும் துவங்கப்பட உள்ளது.

இலவசமாக இடம் பெற்றுத் தருகிறோம் என யாரேனும் விளம்பரம் செய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனென்றால் அரசு நிர்ணயித்துள்ள அரசுக் கல்லூரிக்கான கட்டணம் நிச்சயம் வசூலிக்கப்படும் என்றார். வாக்குகளை குறிவைத்து, ஆளும் அரசுகள் தங்களது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜகவினர் இலவசமாய் வீடு தருகிறோம் என கட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அதற்கு போட்டியாக மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள அதிமுகவினர், அரசுக் கல்லூரியில் இலவசமாய் சீட் வாங்கி தருவதாக மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தடுக்கவேண்டிய மாவட்ட நிர்வாகமோ, எதையும் கண்டும் காணாததைத் போல் உறங்கிக் கொண்டிருக்கிறது.

-அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.