சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த மாணவர் ஒருவரை கூகுள் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக வெளியான தகவலுக்கு கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சண்டிகர் நிர்வாகம் ஜூலை 29 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

பஞ்சாப் மாநிலம், சண்டிகர் செக்டர் 33 பகுதியை சேர்ந்த அரசு பள்ளி  மாணவர் ஹர்ஷித் சர்மா கூகுள் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனிங் பணிக்கு ஆன்லைன் மூலம் நடந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கான பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார். இந்தப் பயிற்சி காலத்தில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அவருக்கு மாதம் ரூ.12 லட்சம் சம்பளம் வழங்கப்படும். இம்மாத இறுதியில் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின் கிராஃபிக் டிசைனிங் அணியில் இணைய உள்ளார். மாணவரின் இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழும். மாணவரின் இந்த  சாதனைக்கு  பள்ளியின் முதல்வர்  பாராட்டு தெரிவித்துள்ளார் என கூறப்பட்டிருந்தது. இந்த தகவல் செய்தி தாள்களிலும் , இணையதளங்களிலும் வேகமாக பரவியது.

இந்நிலையில்  கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஹர்ஷித் சர்மா கூகுள் நிறுவனத்தில் டிசைனர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என எந்த குறிப்பும் எங்களிடம் இல்லை என கூறி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அம்மாநில பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கூறுகையில், மாணவர் கூகுள் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை பள்ளியின் முதல்வர் தான் என்னிடம் கூறினார். ஊடகங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள செய்தி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. இதற்கு பள்ளியின் முதல்வர் தான் பொறுப்பு.    இது தொடர்பாக விசாரணைக்கு சண்டிகர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் தான் இது தொடர்பான தகவல்களை கூற முடியும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: